வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு ரத்து: மேல்முறையீடு செய்ய அரசு முடிவு

0 3201

கல்வி, வேலைவாய்ப்பில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய அரசாணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன், அரசியல் ஆதாயத்துக்காகச் சட்டம் இயற்றப்பட்டதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

முறையாகச் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள் வரும் வரை வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறுத்தி வைக்கவும், அதுவரை வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள் ஒதுக்கீட்டை நடைமுடைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்கவும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்குகளை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது. அப்போது உள் ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? சாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்க முடியுமா? முறையான வரையறுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் இல்லாமல் இது போல உள் ஒதுக்கீட்டை வழங்க முடியுமா? என்பன உள்ளிட்ட 7 வினாக்களை நீதிபதிகள் எழுப்பினர்.

அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்றும், வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்றும் கூறிய நீதிபதிகள், அதற்கான சட்டத்தை ரத்து செய்தனர். பத்தரை விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம்பெற்ற மாணவர்களின் கல்வி இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படும் என்பதால் மேல்முறையீடு செய்யும் வகையில், தீர்ப்பைச் சில வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் எனப் பாமக சார்பில்  முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments