விபத்தில் புதுமண தம்பதி பலி :4 நாளில் முடிந்து போன திருமண வாழ்க்கை..மறுவீடு சென்று வந்த போது சோகம்

0 10074

திருவள்ளூரில் அதிவேகமாக வந்து வளைவில் திரும்ப முயன்ற கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட லாரி, கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்த நிலையில், காருக்குள் இருந்த புதுமண தம்பதி உடல் நசுங்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறுவீட்டுக்கு சென்றுவிட்டு வந்த தம்பதி விபத்தில் சிக்கி மரணித்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கார்த்திகாவுக்கும் கடந்த 28-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பெருங்களத்தூருக்கு மறுவீட்டுக்குச் சென்ற மனோஜ்குமார் - கார்த்திகா தம்பதி நேற்றிரவு காரில் அரக்கோணத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

பூந்தமல்லி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் கூவம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட லாரி ஒன்று வந்துள்ளது. அதிவேகமாக வந்து வளைவில் திரும்ப முயன்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. லாரிக்கு அடியில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், காருக்குள் இருந்த புதுமணத் தம்பதி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தகவல் அறிந்து வந்த மப்பேடு போலீசார், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியை அப்புறப்படுத்தினர். அதற்கு பிறகு காரை உடைத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

மேலும், அந்த பகுதிகளில் ஏதேனும் சிசிடிவி காட்சிகளில் விபத்து தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய கனவுகளோடும், எதிர்பார்ப்புகளுடனும் திருமண வாழ்க்கையை தொடங்க நினைத்த தம்பதியின் வாழ்நாள் சில நிமிடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து நிகழ்ந்த பகுதி எஸ் போன்ற வளைவு பகுதியாகும். இதனை குறிக்க இருபுறமும் வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. வளைவுக்கு முன்னேயும், பின்னும் வேகத்தடைகள் இருக்கிறது. ஆனால், ஓட்டுநர் வந்த மார்க்கத்தில், வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. வளைவுப் பகுதிக்கான அறிவிப்பு பலகை மட்டும் இருந்துள்ளது.

இருப்பினும், கவனக்குறைவாக வந்த லாரி ஓட்டுநர், மழை நேரத்தில் அதிவேகமாக வந்து வளைவில் திரும்பியதோடு, எதிர்திசையில் காரை பார்த்ததும் திடீரென Suddern பிரேக் அடித்ததால், லாரி சறுக்கி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. லாரியில் சுமார் 80 டன் அளவுக்கு பாரம் இருந்ததாக கூறும் போலீசார், அதனால் தான் கார் அப்பளம் போல் நொறுங்கியதாக தெரிவிக்கின்றனர். லாரிக்கு அடியில் சிக்கிய காரை மீட்க 3 கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments