1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - களைகட்டிய வரவேற்பு

0 2869

ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாலை அணிவித்தும், இனிப்பு, பூங்கொத்து கொடுத்து மாணாக்கர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுமார் 19 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு வந்த மாணவ -மாணவிகளை ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்தும், சாக்லெட் வழங்கியும் வரவேற்றனர். சில இடங்களில் பேண்ட் வாத்தியங்கள் முழங்கவும் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளி நுழைவுவாயிலேயே மாணவர்கள் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சானிட்டைசரால் கைகளை சுத்தம் செய்து, முகக்கவசம் வழங்கப்பட்ட பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தனிநபர் இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் வகுப்பறைக்குள் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 600 நாட்களுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதால், மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முதல் 15 நாட்களுக்கு ஓவியம், கதை, பாடல், விளையாட்டு உள்ளிட்ட மனமகிழ்ச்சி செயல்பாடுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மடுவின்கரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், மாணவர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், இனிப்பு வழங்கி மாணவர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி மேல்நிலைப்பள்ளியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவர்களை வரவேற்றார். மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், டெய்ரி மில்க் சாக்லேட் கொடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் மணக்காடு மாநகராட்சி பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆட்சியரே நேரில் வந்து மாணவர்களுக்கு மாலை அணிவித்து பள்ளிக்குள் அழைத்துச் சென்றார்.

 திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளியில் மேளதாளத்துடன் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்களை கவரும் வகையில் அவர்களுக்கு பிடித்தமான மிக்கி மவுஸ்
உடையணிந்த இருவர் கை குலுக்கி வரவேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சாக்குளம் கிராமத்தில் செயல்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை வரவேற்க கரகாட்டம், தப்பாட்டம், பொய் கால்குதிரை ஆட்டம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரத்தி எடுத்தும், மாணவர்களுக்கு மாலை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments