நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்.. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை..!

0 5058

 

மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு குடும்பத்தினர் சடங்குகளை செய்யவிருப்பதால் அவரது நினைவிடத்தில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு முதலமைச்சர், மாநில ஆளுநர் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவர்கள், சக நடிகர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய வண்ணமே இருந்தனர். அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்து, அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த புனித் ராஜ்குமாரின் மகள் திரிதி தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

கண்டீரவா மைதானத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் ஊர்வலமாக கண்டீரவா ஸ்டுடியோ எடுத்துச் செல்லப்பட்ட புனித் ராஜ்குமாரின் உடல், தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக ஃப்ரீசர் பெட்டியைத் திறந்தவுடன் துக்கத்தை அடக்க முடியாத முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, புனித் ராஜ்குமாரின் நெற்றியில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.

புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அவர்களது குடும்ப வழக்கப்படி ஈம காரியங்கள் செய்யப்படவிருப்பதாகவும் அதற்காக அடுத்த 5 நாட்களுக்கு நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்த ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments