மார்பிங் மிரட்டலால் கல்லூரி மாணவி பலி... கேரள பிளாக்மெயிலர் கைது..!

0 3772

மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படத்தை வெளியிடுவதாக கூறி 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டும், முகநூல் காதலனிடம் இருந்து காப்பாற்றுமாறு போலீசில் புகார் அளித்த 19 வயது கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கேரளாவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் தாமதமான நடவடிக்கையால்  ஒரு உயிர் பறிபோன சம்பவத்தின் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஆதிரா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் தன்னுடன் முகநூலில் அறிமுகமாகி பழகி காதலனான, கேரளாவை சேர்ந்த நிகில் பிரசாத் என்பவர் தன்னுடைய புகைபடங்களை பெற்று மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து வைத்துக் கொண்டு 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அதனை அவர் சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தர விடப்பட்டது. விசாரணையில் தீவிரம் காட்டாமல் போலீசார் மெத்தனம் காட்டிய நிலையில் மீண்டும் மாணவி ஆதிராவை கடுமையாக மிரட்டிய அந்த முகநூல் பிளாக்மெயிலர் ஆதிராவின் சில படங்களை வெளியிட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அவமானம் தாங்காமல் கடந்த 22 ந்தேதி அந்த மாணவி தற்கொலை கொண்டதாக கூறப்படுகிறது

எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தால் அதிர்ந்து போன பளுகல் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பிளாக்மெயில் காதலனை தேடிவந்த போலீசார், அவனது குடும்பத்தினரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே மாணவி பயன்படுத்திய செல்போன் , லேப் டாப்பை ஆய்வு செய்தனர் . இதில் மாணவியை மிரட்டியதற்கான பல்வேறு புகைப்பட ஆதாரங்கள், வீடியோக்கள் தொடர்பான தகவல்கள் இருந்தன .

தற்கொலைக்கு முன் மாணவி, சம்பந்தப்பட்ட தன் காதலன் நிகில் பிராசத்துக்கு தனது தற்கொலை தொடர்பான தகவல்களை வாட்ஸ் அப்பில் தெரிவித்துள்ளார். தனது அறையில் இருந்தவாறு கை நரம்பை அறுத்து ரத்தம் வெளியேறிய நிலையில் அதை வாட்ஸ் அப் மூலம் அந்த இளைஞனுக்கு அனுப்பி இருந்தார். மேலும், தான் தூக்கில் தொங்க போவதாக கூறி , துப்பட்டா கட்டி இருந்த காட்சியையும் அனுப்பி வைத்து இருந்தார். இவற்றை முக்கிய தடயமாக கைப்பற்றியுள்ளனர்.

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணை யில் , முகநூல் பிளாக் மெயிலர் நிகில் பிரசாத், ஏற்கனவே ஒரு மாணவியுடன் பழகி ஏமாற்றி மிரட்டியதும் தெரிய வந்தது. கேரளாவை சேர்ந்த நிகில் பிரசாத் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த போது, தனிப்படை போலீசார் அவனை சுற்றிவளைத்து கைது செய்தனர். அங்கிருந்து அழைத்து வரப்பட்ட அவனிடம் பளுகல் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .

பிளாக்மெயிலர் நிகிழ் பிரசாத்தின் மொபைல் போனில் இருந்தும் அடிக்கடி மாணவிக்கு, மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ள காவல்துறையினர். இந்த பிளாக் மெயிலுக்கு உடந்தையாக இருந்த அவனது குடும்பத்தை சேர்ந்த சிலரை வலை வீசித் தேடிவருகின்றனர்.

முன் பின் தெரியாமல், முக நூலில் மட்டுமே நட்பாக பேசக்கூடியவர்களை நம்பி இதயத்தை பறிகொடுத்தால் முடிவில் என்னமாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments