மனிதநேயர் புனித்ராஜ்குமார் மரணம்..! இன்று முதல் நீ புனிதனப்பா

0 3570

கன்னட திரை உலகின் பவர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் புனித்ராஜ் குமார் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 46. காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மனித நேயர் மரணித்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக வர்ணிக்கபட்டவர் புனித்ராஜ்குமார்..! பழம்பெரும் நடிகர் ராஜ்குமார் - பர்வதம்மா தம்பதியரின் இளைய புதல்வரான புனித்ராஜ்குமார் மிகச்சிறந்த மனித நேயர்..! இவரது மூத்த சகோதரர் சிவராஜ்குமார் கன்னட திரை உலக சூப்பர்ஸ்டாராக விளங்குகிறார்.

சென்னையில் பிறந்த புனித்ராஜ்குமார், 1976 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றினார். 1986 ஆண்டு வெளியான பேட்டடா ஹூவு என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றார். அப்பு என்ற படத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களின் அன்பை பெற்ற புனித்ராஜ்குமார் இதுவரை 46 படங்களில் நடித்துள்ளார். கர்நாடக மாநில அரசின் விருதுகளை 4 முறை பெற்றுள்ளார்

48 இலவச பள்ளிக்கூடங்கள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள் ,1800 மாணவ , மாணவியருக்கு இலவச கல்வி உதவி தொகை என தன் வருமானத்தில் ஒரு பகுதியை மக்களுக்காவும், சமூக நற்பணிக்காகவும் புனித்ராஜ்குமார் செலவிட்டு வந்தார்..! ரசிகர்களால் அப்பு என்று அழைக்கப்படும் புனித்ராஜ்குமார் தன்னை காணவிரும்பும் ரசிகர்களின் வீட்டுக்கு ஆரவாரமில்லாமல் தானே நேரடியாக சென்று அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது வழக்கம்..!

லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும் இவர் மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களை பட வெளியீட்டின் போது சர்ப்ரைஸாக சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்வதையும் புனித் ராஜ்குமார் வழக்கமாக வைத்திருந்தார்

எல்லாவற்றையும் விட உடலை பேணுவதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் இவர் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் பழக்கமுடையவர்.

தன்னை சந்திக்கும் பிரபலங்களிடமும், ரசிகர்களிடமும் உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உடற்பயிற்சி முக்கியம் என்பதை தவறாமல் எடுத்துக்கூறும் அளவிற்கு வெறித்தனமான உடற்பயிற்சி பிரியர்.

அந்தவகையில் வியாழக்கிழமை நள்ளிரவு பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய புனித் ராஜ்குமார், வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம் போல உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். தீவிர மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுய நினைவிழந்த அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி புனித்ராஜ்குமார் உயிரிழந்ததாக மருத்துவர் அறிவித்தார்

புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு என்றதும் ரசிகர்களும் உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கினர். அவர் உயிரிழந்த செய்தி கேட்டு கர்நாடக மாநில மக்கள் சோகத்தில் மூழ்கினர். பெரும்பாலான நிறுவனங்கள் கடைகள் அடைக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளலாய் வாழ்ந்த புனித்ராஜ்குமார் மரணத்துக்கு பின்னர் தனது கண்களை தானம் செய்ய விரும்புவதாக அறிவித்திருந்தார். அதன்படியே அவரது இரு கண்களும் பெறப்பட்டு கண்வங்கியில் வைக்கப்பட்டுள்ளது.

வாழ்ந்த போது பலருக்கு செய்த உதவிகளால் மனித நேயராய் உயர்ந்து நின்ற புனித்ராஜ்குமார், 46 வயதிலேயே எதிர்பாராமல் உயிரிழக்க நேர்ந்தாலும் தனது கண்களால் பார்வையற்ற ஒருவரின் வாழ்வில் ஒளியேற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பெங்களூரு கண்டீரவா விளையாட்டரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் Thawar Chand Gehlot ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் பிரபு தேவா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். புனீத் ராஜ்குமாரின் உடலை காண சாரை சாரையாய் நீண்ட வரிசையில் வந்தபடி உள்ள ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments