பள்ளி கூடத்திற்குள் புகுந்து ஆசிரியையிடம் கத்திமுனையில் நகை பறிப்பு..!

0 2281

கோவையில் அட்மிஷன் வாங்குவது போல பள்ளிக்குச் சென்று ஆசிரியையின் 10 சவரன் தாலிச் சங்கிலியை கத்திமுனையில் பறித்துச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சியை வெளியிட்டால் திருடன் தலைமறைவாகி விடுவான் என்று ரகசியமாக நடக்கின்ற தேடுதல் வேட்டை குறித்து விவரிக்கின்றது இந்தச் செய்தித்தொகுப்பு..

கோவை பி கே கே மேனன் ரோடு வெங்கடசாமி லே அவுட்டைச் சேர்ந்தவர் அன்புக்கரசி. இவர் கோவை சின்னசாமி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் . சம்பவத்தன்று அன்புக்கரசி பள்ளியில் உள்ள ஆசிரியர் ஓய்வு அறையில் இருந்து உள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பள்ளிக்கு வந்துள்ளார்.

அவர் நேராக ஆசிரியை அன்புக்கரசியை சந்தித்து, தன்னுடைய மகனை இந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை எனக் கேட்டு விசாரித்துள்ளார். ஆசிரியையும் உண்மையாகவே இவர் மகனை சேர்க்கத்தான் கேட்கிறார் என நினைத்து, பள்ளியில் சேர்ப்பதற்கான நடைமுறைகளை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுத்து ஆசிரியை கழுத்தில் வைத்து நகைகளைத் தரவில்லை என்றால் கத்தியால் குத்திக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன ஆசிரியை, தனது கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலி, வளையல், மோதிரம் உட்பட பத்தரை சவரன் நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தக் கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். ஆசிரியை சத்தம்போட்டு மற்ற ஆசிரியைகள் வருவதற்குள் அவன் தலைமறைவாகிவிட்டான்.

ஆசிரியை அன்புக்கரசி காட்டூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளியில் மகனை சேர்ப்பது போல் நடித்து, ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருக்கள், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது, பெண்கள் நகைகளை மறைத்து போட்டுச்செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி வந்தனர். தற்போது பள்ளிக்குத் தேடி வந்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டத் தொடங்கி உள்ளதால் ஆசிரியைகளும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்த நிலையில், அந்த காட்சிகளை பள்ளியில் இருந்து கையோடு வாங்கிச்சென்ற போலீசார், அந்த கொள்ளையனின் உருவம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ரகசியமாக தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகக் கூறி, காட்சிகளை வெளியிட மறுத்துவிட்டனர்.

அதே நேரத்தில் 10 வருடங்களுக்கு முன்பு சென்னையை உலுக்கிய வங்கிக் கொள்ளையில் கொள்ளையனை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் செய்தியில் வெளியான பின்னர் தான் கொள்ளை சம்பவம் குறித்து துப்பு துலங்கியது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments