ஜம்தாரா கும்பலை பிடிக்க உதவிய கொல்கத்தா தமிழ் அதிகாரி..!

0 10196

செல்போன் நிறுவன வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் போல பேசி, பலரிடம் லட்சக் கணக்கில் பணம் பறித்த ஜம்தாரா திருட்டுக் கும்பலை தமிழக போலீசார் கொல்கத்தாவில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பெரும் உதவியாக இருந்தார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவைச் சேர்ந்த திருட்டுக் கும்பல் கொல்கத்தாவில் அலுவலகம் அமைத்து, செல்போன் மற்றும் வங்கி நிறுவன வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் போல பேசி, நூதன முறையில் பல லட்ச ரூபாய் பணத்தை திருடி வந்தனர். கொல்கத்தா சென்ற சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் சில தினங்களுக்கு முன் அவர்களில் 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஜம்தாரா திருட்டுக் கும்பலைப் போன்ற வடமாநில கும்பலைப் பிடிக்க அங்கு செல்லும் தமிழக காவல்துறையினருக்கு வடமாநில அதிகாரிகளோ, காவலர்களோ பெரிய அளவில் உதவி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. தீரன் திரைப்படத்தில் கூட வட மாநில காவல் துறையினர் ஒத்துழைக்கவில்லை என்பதையும் பதிவு செய்திருப்பார்கள். அதே போன்று ஜம்தாரா கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர் கொல்கத்தா சென்று அங்குள்ள காவல்துறையினரை தொடர்புகொண்ட நிலையில், ஒரு நாள் முழுவதும் அங்குள்ள அதிகாரிகள் வெவ்வேறு எண்களை கொடுத்து அலைகழித்தனர் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்த முறை ஜம்தாரா கொள்ளை கும்பலை பிடிக்க மேற்குவங்கம் சென்ற தனிப்படையினருக்கு அம்மாநிலத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இருப்பிடம், சைரன் வைத்த வாகன வசதி, மொழிபெயர்ப்பாளர், உணவு போன்றவற்றை கொடுத்து பெரும் உதவியாக இருந்ததாக கூறுகின்றனர். ஹவுரா நகரின் காவல் ஆணையராக உள்ள சுதாகர் என்ற அந்த அதிகாரி, தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர். ஐபிஎஸ் அதிகாரியான சுதாகர் மேற்கு வங்க கேடரில் தேர்வாகி தற்போது அங்கு டிஐஜி அந்தஸ்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த தகவல் சென்னை காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட, ஹவுரா காவல் ஆணையர் சுதாகருடன் ஒன்றாக ஐபிஎஸ் பயிற்சி பெற்று சென்னை காவல் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் அவரைத் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து காவல் ஆணையர் சுதாகர், சென்னை தனிப்படை போலீஸாரை ஹவுரா வரவழைத்து, பல வசதிகளுடன் கூடிய அரசு விடுதியை ஏற்பாடு செய்து, சைரன் போலீஸ் வாகனம் போன்ற எல்லா வசதிகளையும் செய்து கொடுத்ததால் கொள்ளையர்களை எளிதாக பிடிக்க முடிந்துள்ளது. அவருக்கு சென்னை காவல் துறை அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments