"முதல் மரியாதை" பட பாணியில் ஒரு சம்பவம்... காட்டிக் கொடுத்த "கட்டை விரல்!

0 3517

சென்னையில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளரை கடத்திய வழக்கில் 'முதல் மரியாதை' பட பாணியில் குற்றவாளியின் துண்டிக்கப்பட்ட கட்டை விரலை அடையாளமாக வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்கடன் சாலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மூசா, பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிலதிபராக உள்ளார். கடந்த மாதம் கானாத்தூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று வரும் போது இவரை ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். கடத்தல் கும்பல் இவரை விடுவிப்பதற்கு 50 லட்சம் கேட்டு மூசாவின் மகனிடம் பேரம் பேசினர். தனிப்படை போலீசார் கடத்தல் கும்பலிடம் பணத்தைக் கொடுப்பது போல் நாடகமாடி சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் அருகே காரில் வந்த கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அந்த சம்பவத்தன்று போலீசாரைப் பார்த்து கடத்தல்காரர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது, அவர்கள் வந்த கார் மீது பாய்ந்த காவலர் சரவணக்குமார் என்பவர் காரில் தொங்கி கொண்டே சென்று அந்த கும்பலை மடக்கி பிடித்த சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த கடத்தல் சம்பவத்தில் தொழிலதிபர் மூசாவிடம் வேலை பார்த்து வந்த பழைய குற்றவாளி அறுப்பு குமார், அவனது கூட்டாளி பிரகாஷ் மற்றும் சங்கீதா என்ற பெண் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையும் தேடி வந்த நிலையில் சதீஷ் என்ற மற்றொரு நபரை கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சதீஷ் எவ்வாறு போலீசாரிடம் சிக்கினார் என்ற சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சதீஷ் சங்கீதாவின் சகோதரர் என தெரிவித்துள்ள போலீசார், சங்கீதா அவரது கணவருடன் சேர்ந்து சென்னை போரூரில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வந்துள்ளார் என்றும் கூறினர். அறுப்பு குமார் மூலம் மூசாவை கடத்திச் சென்று அந்த மறுவாழ்வு மையத்தில் கட்டி வைத்துள்ளனர். ஒரு நாற்காலியில் அமர வைத்து மூசாவின் கண்களை துணியால் கட்டும் போது, மூக்கிற்கும் கண்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி வழியாக அவருக்கு லேசாகப் பார்வை தெரிந்துள்ளது. அதன் மூலம், தனது கண்களைக் கட்டிய நபருக்கு வலது கால் கட்டை விரல் இல்லை என்பது மூசாவுக்குத் தெரிந்துள்ளது.

கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட பின் போலீசாரிடம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார் மூசா. அதனை ஒரு முக்கியத் தகவலாகப் பதிவு செய்துகொண்ட போலீசார், கைதானவர்களின் குடும்பத்தினரைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் வலதுகாலில் கட்டைவிரல் இல்லாத சங்கீதாவின் தம்பி சதீஷ் சிக்கியுள்ளான்.

பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை படத்தில் கொலை செய்துவிட்டு தனது வீட்டில் பதுங்கியிருக்கும் தனது மகளின் கணவனை துண்டிக்கப்பட்ட கட்டை விரலை வைத்து சிவாஜிகணேசன் கண்டுபிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பார். அந்த சினிமா காட்சி போன்று துண்டிக்கப்பட்ட கட்டைவிரலை கடத்தப்பட்ட நபர் கவனித்து கூறியதால் இந்த வழக்கில் அதை வைத்து ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments