ரயிலில் ரூட்டு தல..! சகஜமா அடிச்சிப்போம்.. டைம்பாஸுக்கு வெட்டிப்போம்..! மாறி மாறி கல்வீசி அட்டகாசம்

0 2614
ரயிலில் ரூட்டு தல..! சகஜமா அடிச்சிப்போம்.. டைம்பாஸுக்கு வெட்டிப்போம்..! மாறி மாறி கல்வீசி அட்டகாசம்

கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் ரயிலில், ரூட்டு தல யார் என்ற பிரச்சனையில், பச்சையப்பா மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இரு கோஷ்டிகளாக மின்சார ரெயில் மீது கல்வீச்சில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை மற்றும் மாலை வேளையில் ரயிலில் சென்ட்ரலுக்கு வந்து செல்லும் கல்லூரி மாணவர்களுக்கு ரூட்டு தல ? யார் என்ற பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் முழுவதும் கல்லூரிக்குப் பூட்டுபோட்ட கொரோனாவால், ரூட் தல பிரச்சனை இல்லாமல் ரூட்டு கிளியராக இருந்துள்ளது.

தற்போது மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், பேருந்து முதல் ரெயில் வரை கல்லூரிக்குச் செல்வதாக கூறிக் கொண்டு, அடித்துப் பிடித்து ஏறும் மாணவர்கள் செய்து வரும் அட்ராசிட்டிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அந்தவரிசையில் பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட்டு தல யார் ? என்று மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பாக மோதிக் கொண்ட மாணவர்கள், அங்கிருந்த கற்களை எடுத்து மாறி மாறி வீசியதில் கற்கள் மின்சார ரெயில் மீது பட்டுத் தெறித்தது.

அவர்களது அட்டூழியத்தால் பயணிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் நிலை ஏற்பட்டது. சப்தம் கேட்டு ரெயில்வே போலீசார் அங்கு வந்ததும் அருகில் இருந்த குட்டிச்சுவரில் ஏறிக்குதித்து தப்பி ஓடிய மாணவர்கள், புதர்ப் பகுதிக்குள் சென்று மோதிக் கொண்டனர்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கார்த்திக், ஆகாஷ் ஆகிய இருவருக்கு கை மற்றும் காலில் அரிவாள் வெட்டு விழுந்தது.

தாக்குதலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் தப்பி ஓடி விட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த மாணவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் அனுப்பம்பட்டு பகுதியில் தடையின்றி கஞ்சா விற்கப்படுவதாகவும் அதனை வாங்கச்சென்ற போது இரு தரப்பு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தினமும் பேருந்து மற்றும் ரெயில்களில் அத்தனை பயணிகளையும், போகும் இடத்துக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கும் உண்மையான ரூட்டு தலையான ஓட்டுனர்கள், தங்கள் பணியை வழக்கம்போல் செய்து வருகின்றனர். ஆனால் மாணவர்கள் என்ற பெயரில் டிக்கெட் எடுக்காமல் பேருந்து மற்றும் ரெயில்களில் வித்அவுட்டில் தொங்கிக் கொண்டு பயணிப்பதோடில்லாமல் இந்த ரூட்டுக்கே தல..! என்று கொக்கரிக்கும் இவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இவர்களின் அடாவடியை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments