அதிரவைக்கும் "ஜம்தாரா" கும்பல்.. அதிரடி காட்டிய சென்னை போலீஸ்..!

0 26005

செல்போன் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதுபோல் நடித்து பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து லட்சக் கணக்கில் பண மோசடி செய்த ஜார்கண்ட் மாநிலத்தின் 'ஜம்தாரா' கொள்ளை கும்பலை, சென்னை சைபர் கிரைம் போலீசார் கொல்கத்தாவில் வைத்து கைது செய்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா சைபர் கிரைம் நகரம். செல்போன் எண், வங்கி எண்ணை வைத்து இந்தியாவில் நடக்கும் 50 சதவீத சைபர் குற்றங்கள் ஜம்தாராவில் இருந்து நடப்பதால், அது சைபர்கிரைம் நகரம் என காவல்துறையினரால் அழைக்கப்படுகிறது. 

ஜம்தாராவில் நடக்கும் சைபர் குற்றங்களை வைத்து, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் "ஜம்தாரா'' என்ற ஒரு வெப் தொடர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஜம்தாராவின் இந்த சைபர் கிரைம் கும்பல் பெரும்பாலும் ஆன்லைன் மோசடி வலை விரிப்பது அதிக அளவில் பணப்புழக்கம் உள்ள தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் தான்.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 76 வயதான முதியவர் ஒருவருக்கு அவரது செல்போன் எண்ணின் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து வருவது போல் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் நீங்கள் பல வருடங்களாக பயன்படுத்தும் இந்த செல்போன் எண் 24 மணி நேரத்திற்குள் செயலிழக்கப் போவதாகவும், ஐந்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து தொடர்ந்து இந்த சேவையை பயன்படுத்துங்கள் என கூறப்பட்டிருந்தது. அதிலிருந்த எண்ணை வாடிக்கையாளர் சேவை எண் என நினைத்து அந்த முதியவர் தொடர்பு கொண்டுள்ளார்.

www.rechargecube.com என்ற இணைய தளத்தில் சென்று ஐந்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தொடர்ந்து உங்கள் சிம் கார்டை பயன்படுத்தலாம் என எதிர்முனையில் பேசிய நபர் கூறியுள்ளான். அதனை நம்பி அந்த இணையதளத்தில் சென்று தனது வங்கி கணக்கில் இருந்து ஐந்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தபோது, அது ரீசார்ஜ் ஆகவில்லை. மீண்டும் அந்த வாடிக்கையாளர் எண்ணைத் தொடர்புகொண்டபோது, மற்றொரு வங்கிக் கணக்கை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யுமாறு கூறியுள்ளனர். அதன்படி முதியவர் தனது மனைவி வங்கிக் கணக்கில் இருந்து ரீசார்ஜ் செய்ய முயன்றபோது இருவரது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 13 லட்சம் ரூபாய் பணம் ஒட்டுமொத்தமாக திருடப்பட்டது தெரியவந்தது.

சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மின் கட்டணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் ஆய்வாளர் ஒருவர் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் கொல்கத்தா சென்றடைந்தனர். திருடப்பட்ட பணத்திலிருந்து மின் கட்டணம் செலுத்தப்பட்ட நிறுவனத்தை தேடிச் சென்று விசாரித்தபோது, அது ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் நிறுவனம் என்பது தெரியவந்தது. அவர்கள் ஒரு ரீசார்ஜ் கடை மூலம் மின் கட்டணம் செலுத்தியதாக கூற, அந்த கடையில் இருந்தவர்களை பிடித்து விசாரித்ததில், ஜம்தாரா கொள்ளையர்களின் இருப்பிடம் குறித்து தெரியவந்தது. ஹவுரா அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வைத்து, மூன்று பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், 20 செல்போன்கள், 180 சிம்கார்டுகள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசாரணையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவை மையத்தில் இருந்து அனுப்புவது போல், bulk SMS என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்தின் செல்போன் எண்களை எடுத்து கடைசி நான்கு எண்களை மட்டும் மாற்றி தினமும் சுமார் 400 வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து அனுப்பும் லிங்கை கிளிக் செய்யும்போதே, team viewer quick support போன்ற செயலி வாடிக்கையாளருக்கு தெரியாமல் பதிவிறக்கம் செய்யப்படுவதால், அதன் மூலம் அந்த செல்போனில் வரும் குறுஞ்செய்தி, ரீசார்ஜ் செய்யும் போது பதிவிடும் வங்கி ரகசிய தகவல் என அனைத்தையும் இந்த மோசடி கும்பலால் அவர்களின் செல்போன் மூலம் பார்க்க முடியும். செயலியை ஆக்டிவேட் செய்வதற்காக அனுப்பப்படும் 8 இலக்க ஓடிபி எண்ணை, வாடிக்கையாளர் சேவைக்கான எண் எனக்கூறி ஏமாற்றி வாங்கிக் கொள்கின்றனர். அதன் மூலம் செல்போனை நோட்டம் விட்டு பணத்தை சுலபமாக திருடுகின்றனர். இவ்வாறு பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்த ஜம்தாரா சைபர் கொள்ளையர்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத நபர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முறையாக எழுதிப்படிக்க தெரியாவிட்டலும், ஜம்தாராவில், இதற்கென பயிற்சி எடுத்து கொண்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மற்ற மாநில காவல் துறையினரால் எளிதில் சென்று பிடிக்க முடியாத ஜம்தாரா சைபர் கிரைம் கொள்ளையர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். இவர்கள் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் கைது செய்ய முடிவு செய்துள்ள சென்னை காவல்துறையினர் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments