சூடானில் ராணுவ ஆட்சி... கொந்தளிக்கும் மக்கள்!

0 1451

சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், ராணுவவீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். வீதிகளில் இறங்கி முழக்கமிட்ட 140க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

வட ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்தவர் உமர் அல் பஷிர். கடந்த 2019ம் ஆண்டில் இவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் வெடித்ததால் ராணுவம் பஷீரைக் கைது செய்து, அதிபர் பதவியிலிருந்து நீக்கியது.

இதன் பின் புதிய ஆட்சி அமைப்பதில் ராணுவத்திற்கும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்த குழுவிற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

2023ல் தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்ந்தெடுப்பதெனவும் அதுவரை பிரதமர் அப்தல்லா ஹம்தக் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தாங்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் கார்தோமிலும், ஆம்துர்மன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர். சாலைகளில் கற்களைக் குவித்தும், டயர்களை தீயிட்டு எரித்தும் அரசு எதிராக போராடி வருகின்றனர்.

போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 140க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் 700 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை நிறுத்தி வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments