யூடியூப்பை பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த கும்பல்..! ஜெராக்ஸ் போட்டு சிக்கியது!

0 2680

சேலம் அருகே யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தீபாவளிச் செலவுக்காக கலர் ஜெராக்ஸ் மிஷினுடன் தொடங்கிய கள்ளநோட்டுத் தொழில், போலீசாரால் முடக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சேலம் அருகே உள்ள காக்காபாளையம் அடுத்த தப்பக்குட்டை என்ற பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்தனர்.

அப்போது பையில் ஏராளமான புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அவற்றை கையில் எடுத்து சோதித்த காவல்துறையினர் உடனடியாக அவை கள்ள நோட்டுக்கள் என்பதை கண்டறிந்தனர். விசாரணையில் அவன், தப்பக்குட்டையைச் சேர்ந்த பொன்னுவேல் என்பதும் நண்பர்கள் யோசனைப்படி, இந்த பணத்தை தீபாவளிக்காகப் பொருட்கள் வாங்கக் கூட்டமாக இருக்கும் கடைகள், சந்தைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் மாற்றும் திட்டத்துடன் புறப்பட்டுச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தான்.

அவன் கொடுத்த தகவலின் பேரில், அவனது நண்பர்கள் மாட்டையாம்பட்டி தெசவிளக்கு பகுதியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி ஆகியோரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். இவர்கள் 3 பேரிடமிருந்தும் 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 160-ம் , 200 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 313 என மொத்தம் ரூபாய் ஓரு லட்சத்து 42 ஆயிரத்து 600 ரூபாய் கள்ள நோட்டுகளையும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ் மிஷின் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் தறித்தொழிலுக்கு சென்று வந்த நிலையில், அதில் போதிய வருமானம் இல்லாததால், தீபாவளிஙப பண்டிகைக்குத் துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்க அதிக பணம் தேவைப்படும் என்பதால், அந்த செலவுகளைச் சமாளிக்க குறுக்கு வழியைத் தேடியுள்ளனர். அப்போது யூடியூப்பை பார்த்து கள்ள ரூபாய் நோட்டு அச்சடிப்பது எப்படி ? என தெரிந்து கொண்டு உள்ளனர்.

அதன்படி கலர் ஜெராக்ஸ் மெஷின் ஒன்றை வாங்கிவந்து இதிலிருந்து கள்ள நோட்டு அச்சடித்தனர் அவர்களது கெட்ட நேரம் அவர்களிடம் இருந்த அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் ஒரே மாதிரியான சீரியல் நம்பர் இருந்ததால் போலீசாரிடம் எளிதாக சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

யூடியூப்ப பார்த்து சமையல் செஞ்சோமா அதனை சாப்பிட்டோமான்னு இல்லாமல், துப்பாக்கி தயாரிப்பது , வெடிகுண்டு தயாரிப்பது என்ற சட்டவிரோதச் செயல்களின் வரிசையில் தீபாவளிச் செலவுக்கு கள்ளநோட்டு அச்சடித்ததால் 3 பேரும் தீபாவளிக்கு சிறையில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments