இடம் மாறிய மனதால் தடம் மாறிய மனைவி.. மனம் மாற்றிய கணவர்..! பாசப்போராட்டத்திற்கு வெற்றி..!

0 4773

மார்த்தாண்டத்தில் சொகுசு காருடன் மாயமான தொழிலதிபரின் மனைவி, காதலனுடன் டெல்லியில் மீட்கப்பட்டு, குழந்தைகளின் பாசப்போராட்டத்தால் கணவருடன் வீட்டுக்கு சென்றார். 

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே கொடுங்குளத்தை சேர்ந்த 41வயதான விலை உயர்ந்த பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் அதிபரின் மனைவி கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி இரவு தனது மகளுடன் மாயமானார். வீட்டில் இருந்த சொகுசு காரும் , வீட்டு பீரோவில் இருந்த 45 பவுன் நகை, ரூ.13 லட்சம் பணம் ஆகியவையும் மாயமாகி இருந்தது உறவினர் வீடுகளில் தேடியும் இவர்களை கிடைக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து அந்த தொழில் அதிபர் மார்த்தாண்டம் போலீசில் புகார் தெரிவித்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர் போலீசார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .

இதனைத் தொடர்ந்து மனைவி, மகளை காணாமல் தவித்த தொழில் அதிபர், தனது மனைவி மகளை கண்டுபிடித்து தருமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஹேபியஸ்கார்பஸ் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி 30 நாட்களில் மாயமான இருவரையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மார்த்தாண்டம் போலீசாருக்கு உத்தரவிட்டார் .

இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் தேடும் பணியை தீவிரப்படுத்தினர் தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தொழில் அதிபர் மனைவியின் செல்போன் சிக்னல் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்

அப்போது அவர் எட்டுமுறை சிம் கார்டுகளை மாற்றியதால் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து செல்போனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தொழில் அதிபரின் மனைவி தனது மகளுடன், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் டெல்லியில் தங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் 3 பேரையும் குமரி மாவட்டம் கொண்டுவந்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொழில் அதிபர் தனது மகன் உடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். போலீசார் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் , அவரது மனைவியோ, தான் கணவருடன் செல்ல தனக்கு விருப்பமில்லை என்றும் தான் உயிரையே வைத்துள்ள காதலனான அந்த இளைஞருடன் தான் செல்வேன் என்று அடம்பிடித்தார்.

உடனே அந்த பெண்ணின் கணவரோ, குறுக்கிட்டு மகனுக்கு உடல்நிலை சரியில்லை அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது, எனவே அவனை கவனிக்கவும், பாதுகாக்கவும், கண்டிப்பாக அம்மா வேண்டும்... எனக்காக இல்லாவிட்டாலும் பிள்ளைகளுக்காகவாவது என்னுடன் இருக்க வேண்டும் என்று கெஞ்சி மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.

ஒருபக்கம் தன்னை விட வயது குறைந்த காதலன், மறுபக்கம் தனது கணவர் மற்றும் இரு பிள்ளைகளின் பாசம் போராட்டத்தால் அந்தப்பெண் மனமிரங்கினார்.

இறுதியில் கணவனுடன் வீட்டுக்கு செல்வதாக ஒப்புக்கொண்டார். போலீசார் இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அந்த பெண்ணையும், அவரது மகளையும் கணவருடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

அன்பான குடும்பத்துக்குள் கரு நாகமாய் புகுந்து அந்த பெண்ணின் மனதை கெடுத்து வீட்டை விட்டு டெல்லிக்கு அழைத்துச்சென்ற திருட்டுக் காதலனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

குடும்ப பெண்கள் தங்கள் நிலை உணர்ந்து நடக்க தவறினால் குடும்பத்தினருக்கு என்னமாதிரியான தர்மசங்கடம் ஏற்படும் என்பதற்கு சாட்சியாக அரங்கேறி உள்ளது இந்தச் சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments