ஆபாச வீடியோ கால் ஆப்பு... 200 பேரிடம் ரூ 22 கோடி மிரட்டி பறித்த கேடி தம்பதி..! ஆபீஸ் போட்டு பிளாக்மெயில்

0 4100

முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில்  நட்பை ஏற்படுத்திக் கொண்டு தொழில் அதிபர்களின் படங்களை பிரபல நடிகைகளுடன் மார்பிங் செய்து கோடிகணக்கில் பணம் பறித்த பிளாக்மெயில் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்களை வேலைக்கு அமர்த்தி 2 ஆண்டுகளாக 200 பேரிடம் கோடிகளை பறித்த கேடிகள் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஆடிட்டர் துஷார் என்பவர் 80 லட்சம் ரூபாயை கையாடல் செய்து விட்டதாக அங்குள்ள காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஆபாச வீடியோ காலில் பேசிய பெண்ணின் அழகில் மயங்கியதால், பிளாக்மெயில் கும்பலின் பிடியில் சிக்கி ஆடிட்டர் துஷார் அந்த பணத்தை இழந்தது அம்பலமானது.

ஆடிட்டர் துஷாரின் முகநூல் கணக்கு வழியாக நட்பை ஏற்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் அவரிடம் நட்பாக பழகி செல்போன் நம்பரை பெற்று வீடியோ கால் மூலம் ஆபாசமாக தோன்றியுள்ளார். அந்தப்பெண்ணின் அழகில் மயங்கி மெய்மறந்திருந்த ஆடிட்டர் துஷாரும் பதிலுக்கு அரையும் குறையுமாக நின்றுள்ளார். அந்த வீடியோவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி கொஞ்சம் கொஞ்சமாக 80 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து துஷார் பணம் செலுத்திய வங்கி கணக்கை ஆய்வு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் உத்தரபிரதேசத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காசியாபாத் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த போலீசார் யோகேஷ் கவுதம் - சப்னா என்ற தம்பதியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதில் அந்த இருவரும் கடந்த 2 வருடங்களாக மாதச்சம்பளமாக தலா 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து 3 பெண்களை வேலைக்கு அமர்த்தி தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள், சமூக பிரபலங்கள் , முக்கிய பிரமுகர்கள் ,அதிகாரிகள் என 200 க்கும் மேற்பட்டோரை தங்கள் ஆபாச வீடியோ கால் வலையில் சிக்கவைத்து அவர்களது படங்களை பிரபல நடிகைகள் , மாடல்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று மார்பிங் செய்து அவர்களின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைத்து பிளாக்மெயில் செய்து பணம் பறித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

யோகேஷ் மற்றும் சப்னா பெயரில் உள்ள 4 வங்கி கணக்குகளுக்கு மாதம் 3 கோடி ரூபாய் வரை பல்வேறு நபர்களிடம் இருந்து வந்து குவிந்துள்ளது. ஒட்டு மொத்தமாக 22 கோடி ரூபாய் வரை மிரட்டி பணம் பறித்தது வெளிச்சத்திற்கு வந்தது. பணத்தை பறிகொடுத்தவர்கள் அவமானத்துக்கு பயந்து போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. மேலும் யோகேஷ் - சப்னா தம்பதிக்கு ஆன்லைனில் அறிமுகமான ஆஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியர் தான் புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை துல்லியமாக மார்பிங் செய்து கொடுத்து பிளாக்மெயில் பிசினசுக்கு உதவியுள்ளனர்.

இதையடுத்து யோகேஷ்கவுதம், சப்னா, நிகிதா சிங், பிரியா, நிதிகண்ணா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து செய்த காவல்துறையினர், அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழகத்திலும் முகநூல் பிரபலங்களிடம் அறிமுகமாகி இதே போன்ற வீடியோ கால் பிளாக்மெயில் கும்பல் பணம் பறித்து வருவது தொடர்பான புகார்கள் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் இதனை முழு நேர தொழிலாக செய்து வந்த சில கேடிகள் சிக்கி இருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments