சேமியா கம்பெனி காதல்... மாமியார் கையில பெட்ரோல்..! ரத்தம் சிந்திய காதலன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

0 4009

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே வாட்ஸ் அப் வீடியோ காலில் கையை அறுத்துக் கொண்டு காதல் திருமணம் செய்து கொண்ட  ஜோடியை பிரித்து அனுப்பக்கோரி கையில் பெட்ரோலுடன் போலீஸ் நிலையம் முன்பு பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேமியா கம்பெனியில் மலர்ந்த காதலால் காதலியை கைபிடித்து, மாமியாரை கையில் பெட்ரோல் கேன் தூக்க வைத்த காதலன் ராம் குமார் இவர் தான் ..!

திண்டுக்கல் மாவட்டம் பெரிய கோட்டையை சேர்ந்தவர் ராம்குமார் இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் சேமியா கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்
இவரும், அதே கம்பெனியில் வேலைபார்த்து வந்த கருவார்பட்டியை சேர்ந்த சத்தியபிரியா என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். வேலைக்கு செல்லும் இடத்தில் ஏற்பட்ட காதலை விடுமுறை நாட்களில் வீடியோ காலில் வளர்த்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்தது சத்தியப்பிரியா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் சத்திய பிரியா காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராம்குமார் சத்திய பிரியாவுக்கு வீடியோ காலில் தொடர்புகொண்டு திருமணம் செய்து கொள்ள மறுத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி தனது கையில் பல இடங்களில் பிளேடால் வெட்டிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட வீடியோ வெளியிட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது

வீடியோ கால் பேசியதை ஸ்க்ரீன் ரெக்கார்டு செய்து சத்திய பிரியாவுக்கு அனுப்பி மனதை மாற்றியுள்ளார். இதைப்பார்த்த சத்யபிரியா தான் இல்லை என்றால் உயிரை மாய்த்துக் கொள்வாரோ ? என்று பயந்து, வீட்டை விட்டு வெளியேறி காதலன் ராம்குமார் உடன் சென்றதாக கூறப்படுகின்றது.

இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு ராம்குமாரின் உறவினர் வீட்டில் 10 நாட்களாக தங்கி குடித்தனம் நடத்தியுள்ளனர். இதற்க்கிடையே வீட்டில் இருந்து மாயமான மகளை அவரது பெற்றோர் தேடிவந்த நிலையில் சனிக்கிழமை ராம்குமாரும், சத்திய பிரியாவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கூறி வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்

இந்தச் சம்பவம் சத்திய பிரியாவின் உறவினர்களுக்கு தெரிய வர துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த சத்திய பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் வீட்டுப்பெண்ணை தங்களுடன் அனுப்புமாறு கூறி கூச்சலிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

சத்தியப்ரியா, தனது பெற்றோருடன் செல்ல மறுக்கவே அவரது தாயார் விஜயலட்சுமி கையில் பெட்ரோல் கேனை வைத்துக் கொண்டு எம் புள்ள எனக்கு வேணும்.... என்று கதறி அழுதபடியே நின்றார்

அவரது உறவினர் ஒருவர் ஓடி வந்து தங்கச்சி, உன் மேலே ஊற்றி தற்கொலை செய்து கொள் என்று கூறியதால் அவர் பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொள்ளமுயற்சித்தார்.

அதற்குள்ளாக மற்றொரு உறவினர் நம்ம வீட்டு பொண்ண கூட்டி போயிருக்கான் அவன பெட்ரோல் ஊற்றி எரிக்கனும்... என்று பெட்ரோல் கேனை பறித்துச்செல்ல அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப்பிடித்து பெட்ரோல் கேனை பறித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, வெளியே நடந்த களேபாரத்தை அறிந்து அவரது அலுவலகத்திற்குள் இருந்து வெளியே வந்த டிஎஸ்பி, அங்கு கூடியிருந்த பெண்ணின் உறவினர்களை சத்தம் போட்டு எச்சரித்து அங்கிருந்து விரட்டினார்.

காதலன் ராம்குமாருடன் தான் செல்வேன் என்று சத்தியப்பிரியா உறுதியாக இருந்ததாலும், இருவரும் மேஜர் என்பதாலும், போலீசார் பெண்ணின் உறவினர்களை அங்கிருந்து புறப்பட்டு செல்ல கூறினர். உறவினர்கள் கூட்டம் கலைய தொடங்கியதால் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட காதல் ஜோடியை போலீசார் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

பல ஆண்டுகளாக செல்லமாக வளர்த்த பெண், பெற்றோர்களை விட்டுவிட்டு தானாக காதலித்து திருமணம் செய்ததை ஏற்றுக் கொள்ள மனமில்லாததால், அவரது உறவினர்கள் ஆவேசத்துடன் போலீஸ் வாகனத்தை விரட்டிச்செல்ல முடிவெடுத்தனர். போலீசார் எச்சரித்ததால் சோகத்துடன் அங்கிருந்து சென்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த சம்பவங்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments