ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல்.. பெரும்பாலான பதவிகளை கைப்பற்றியது திமுக..!

0 2477

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு, திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு படப்பை மனோகரனும், துணை தலைவர் பதவிக்கு நித்யா சுகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோன்று, தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட வாலாஜாபாத் ஒன்றியம் தவிர்த்து, மாவட்டத்திலுள்ள மற்ற நான்கு ஒன்றியங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 ஒன்றியங்களில் ஆறு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியிடங்களில் திமுக வென்றது. மதுராந்தகம் ஒன்றியத்தில் திமுகவினர் இடையேயான போட்டியால், அங்கு ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த புவனேஷ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த தங்கம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும், கள்ளக்குறிச்சி. சின்னசேலம் உள்பட ஒன்பது ஒன்றியங்களில் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக திமுகவே கைப்பற்றியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றது. ஒன்றிய தலைவருக்கான தேர்தலை பொறுத்தவரையில் 11 ஒன்றியங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளிலும் திமுக வென்றது. இதில், 8 ஒன்றியங்களில் போட்டியின்றி திமுக வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் என்பவரும், துணை தலைவர் பதவிக்கு செல்வலட்சுமி என்பவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் மொத்தமுள்ள பத்து ஒன்றியங்களிலும் திமுக வெற்றி பெற்றது. மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவியையும் திமுகவே கைப்பற்றியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் 6 ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிகளை திமுகவே கைப்பற்றியுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி தலைவராக சூர்யகுமார் என்பவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியிடங்களை திமுக வென்றது. இதுதவிர, நெமிலி தவிர்த்து மற்ற ஆறு ஒன்றியங்களுக்கான தலைவர் மற்றும் துணை தலைவருக்கான இடங்களிலும் திமுகவே வெற்றி பெற்றிருக்கிறது.

வேலூர் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவி மற்றும் ஏழு ஒன்றிய தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது. ஒன்றிய துணை தலைவருக்கான பதவியிடங்களை பொறுத்தவரையில், குடியாத்தம் ஒன்றியம் தவிர மற்ற இடங்களை திமுக கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments