100 கோடி தடுப்பூசி சாதனை இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் பிரதமர் பெருமிதம்

0 3002

100 கோடி தடுப்பூசி சாதனை, புதிய இந்தியாவின் இமேஜை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளர். மேலும், 100 கோடி தடுப்பூசிகள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல, இந்தியாவின்  வரலாற்றில் புதிய அத்தியாயம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், கடைக்கோடி மக்களுக்கும் அவை சென்று சேர்வதை மத்திய அரசு உறுதி செய்ததாகவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும், தடுப்பூசி செலுத்துவதில் அனைவரும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தேசிய தடுப்பூசி திட்டத்தில் விஐபி கலாச்சாரம் தலைதூக்க விடாமல் பார்த்துக் கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். உலகமே இந்தியாவை கொரோனாவில் இருந்து பாதுகாப்பான நாடாக பார்ப்பதாகவும், உலக அளவில் மருந்து உற்பத்தியில் இந்தியாவிற்கு சிறப்பான இடம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பியது எவ்வாறு கொரோனாவை ஒழிக்கும்? என சிலர் கேள்விக்குள்ளாக்கியதாக தெரிவித்த மோடி, அது நோயெதிர்ப்பில் பொதுமக்களின் பங்கேற்பை உறுதி செய்ததாக குறிப்பிட்டார்.

தடுப்பூசி திட்டம் தொடங்கியபோது, அதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தற்போது அதில் இருந்து மீண்டு அனைவரும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் தடுப்பூசி திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், கோவின் இணையதளம் தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் மிக எளிதாக கொண்டு சேர்த்ததாக தெரிவித்தார். கொரோனா தாக்கத்தால் துவண்டு விடாமல் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியதால், இந்திய பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதாக பிரதமர் உரையில் குறிப்பிட்டார். 100 கோடி தடுப்பூசி சாதனைக்காக இந்தியர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், இதுவரை செலுத்தாதவர்களை ஊக்குவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும், வரவிருக்கும் பண்டிகைகளை பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கொண்டாடுமாறும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்கி பயன்படுத்துமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments