மாவுக்கட்டு ரவுடி மனைவிக்கு போஸ்டிங்... போலீஸ் கொடுத்த ஷாக்..! ஜெயிலில் இருந்தே மிரட்டல்

0 4764

காஞ்சிபுரம் மாவட்டம் நெடுங்குன்றத்தில் ஜெயிலில் இருந்தபடியே மிரட்டல் விடுத்து , ஊராட்சி மன்றத் தேர்தலில் தனது மனைவியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வைத்த ரவுடி ஒருவன் போலீசுக்கு சவால் விடுத்த நிலையில், கஞ்சா வழக்கில் அவனது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆண்டாண்டு காலமாக அடைமொழியோடு வாழும் சென்னை புறநகர் ரவுடிகளில் முக்கியமானவன் காஞ்சிபுரம் மாவட்டம் நெடுங்குன்றத்தை சேர்ந்த சூர்யா என்கிற நெடுங்குன்றம் சூர்யா. இவனது மனைவி விஜயலெட்சுமி

கஞ்சா வழக்கு, கொலை வழக்குகள், வெடிகுண்டு வீச்சு என அடுத்தடுத்து குற்றசெயல்களில் ஈடுபட்டதால் வழுக்கி விழுந்து வலது காலில் மாவுக்கட்டுடன் குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கப்பட்டவன் நெடுங்குன்றம் சூர்யா ..!

தற்போது ஜெயிலில் இருந்தாலும் போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் அங்கிருந்தபடியே ஊரில் உள்ளோரை எல்லாம் மிரட்டி கலக்கமடைய செய்து அவனது வார்டு உறுப்பினராக மனைவி விஜயலெட்சுமியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வைத்து கெத்துக் காட்டியுள்ளான் சூர்யா, அடுத்ததாக ஊராட்சி மன்ற துணைதலைவர் பதவியும் தனது மனைவிக்கு தர வேண்டும் என்று வார்டு உறுப்பினர்களுக்கு கட்டளை இட்ட தகவல் காவல்துறையினரின் காதுகளுக்கு எட்டியது.

இதையடுத்து விஜயலெட்சுமி உறுப்பினராக பதவியேற்ற சில நொடிகளில் கஞ்சா வழக்கில் அதிரடியாக கைது செய்து சூர்யாவின் கட்டளைக்கு கட்டையை போட்டுள்ளனர் காவல்துறையினர்.

விஜயலெட்சுமி மீது ஏற்கனவே இரட்டை கொலை வழக்கு, கஞ்சா வழக்குகள் இருப்பதாக கூறப்படுகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு கணவன் சூர்யா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தனது கணவனின் சகோதரரின் கொலைக்கு பழிவாங்க சிறையில் இருந்தபடியே சூர்யா போட்டுக் கொடுத்த ஸ்கெட்ஜின் படி கூலிப்படையை ஏவி இரட்டை கொலை செய்ததால் அவர் கொலை வழக்கில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஜெயிலில் இருந்து ரவுடி நெடுங்குன்றம் குணா யார் யாரிடம் பேசி மிரட்டினான் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் சிறையில் இருக்கும் சூர்யாவுக்கு செல்போன் சப்ளை செய்தது யார் என்பது குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரவுடிகள் பெயருக்கு முன்னாடி இருக்கிற அடைமொழிய நீக்கனும், இல்ல அடைமொழிக்கு பின்னல் இருக்கிற பெயர் எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் புற நகர் ரவுடிகள் பலர் கலக்கமடைந்துள்ளனர்.

இதனிடேயே, நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக, கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ள விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மறைமுகத் தேர்தலில் 14 வார்டு உறுப்பினர்கள் முன்மொழிந்த நிலையில் விஜயலட்சுமி போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments