கரிப்பிடித்த சொம்பு ரூ 2000 கோடியாம்.. இருடியம் இம்சைகள்.. கவசஉடை களவாணி கும்பல்..!

0 5067
கரிப்பிடித்த சொம்பு ரூ 2000 கோடியாம்.. இருடியம் இம்சைகள்.. கவசஉடை களவாணி கும்பல்..!

தீயில் கருக்கிய பித்தளைச் சொம்பை இரிடியத்தாலானது என கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை பேசி, 25 லட்சம் ரூபாயை அபேஸ் செய்த, கள்ளநோட்டுக் கும்பலை கைது செய்த காவல்துறையினர்,  99 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுக்களைப் பறிமுதல் செய்தனர்

'இரிடியம் என்ற உலோகத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பிருப்பதாகக் கூறப்படுவது கட்டுக்கதை' என்று சதுரங்கவேட்டை மூலம் எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் அதனை நம்பாமல், கோவில் கலசம், பெட்ரோமாக்ஸ் லைட், பழைய குடம் வரிசையில் தற்போது பித்தளைச் சொம்பைக் காட்டி 25 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளது கவச உடை மோசடிக்கும்பல் ஒன்று..!

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள வீடு ஒன்றில் முகாமிட்டிருந்த இந்த கும்பலைச் சேர்ந்த சாஜி மற்றும் போஜராஜன் ஆகியோர், கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் கலாம் மற்றும் மகரூப் ஆகிய இருவரை அணுகி , 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்திலான சொம்பு தனது நண்பர் முருகேசனிடம் இருப்பதாகவும், சக்தி வாய்ந்த அந்த இரிடியம் சொம்பை விற்றால் பல நூறு கோடிகள் வருமானம் கிடைக்கும் என்றும், உலக அளவில் பல்வேறு நபர்கள் வந்து போட்டி போட்டுப் பணத்தை கொட்டிக்கொடுத்து வாங்கிச்செல்வார்கள் எனவும் ஆசைகாட்டியுள்ளார்.

தங்களிடம் இருக்கும் இரிடியத்தின் தரத்தைத் தெரிவிப்பதற்காக, உலோக ஆராய்ச்சியாளர் என்று தினேஷ்குமார் என்பவரையும் அறிமுகப்படுத்தி உள்ளார். அந்த இரிடியம் சொம்பு , பல கோடி ரூபாய் விலை மதிப்பு மிக்கது என்று தினேஷ்குமாரும் தன் பங்கிற்கு கதை அளந்து விட்டுள்ளார்.

இவர்களது பேச்சை உண்மை என்று நம்பி அந்த சொம்பை பார்ப்பதற்கு இருவரும் ஆர்வம் காட்டியுள்ளனர். வாசலில் இரு பவுன்சர்களையும் நிறுத்தி இருந்தனர். அந்த அறைக்குள் நுழைந்ததும் கண்கள் மற்றும் உடல் எல்லாம் எரிவது போல இருந்துள்ளது. இரிடியம் கதிர்வீச்சு சக்தி வாய்ந்தது எனவும், அதனை உலோக உடை அணிந்துதான் தொட்டுப்பார்க்க இயலும் என்பதால் 25 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து 3 தவணைகளாக சாஜியிடம் 25 லட்சம் ரூபாய் கொடுத்த அப்துலும், மகரூப்பும் கவச உடையைத் தயார் செய்ய கூறியுள்ளனர். கவச உடையை அணியச்செய்து ஒரு பெட்டிக்குள் இருந்து கருப்பு வர்ண சொம்பை தூக்கி வைத்துள்ளனர். அதனை பார்த்ததும் இரிடியம் அல்ல என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததோடு தாங்கள் கொடுத்த 25 லட்சம் ரூபாயை திரும்பக் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அவரிடம் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்துக் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர்.

ரூபாய் நோட்டுகளை இருவரும் சரிபார்த்தபோது, அவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என்பதை அறிந்து அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். தங்கள் பணத்தை திருப்பி தரக் கேட்டு தகராறு செய்ததால், பணத்தைக் கொடுக்க மறுத்து பவுன்சர்களை வைத்து அடித்து விரட்டியுள்ளனர்.

இதையடுத்து இந்த இரிடியம் மோசடி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திடம் புகார் அளித்தனர். தனிப்படை போலீசார் விரைந்து சென்று கே.ஆர்.கார்டன் பகுதியில் இரிடியம் மோசடிக் கும்பகை சுற்றிவளைத்தது. பதுங்கி இருந்த வீட்டில் இருந்து 99 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு கட்டுக்கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இரிடியம் சொம்பு என்று கூறப்பட்ட கரிபிடித்த பித்தளைச் சொம்பையும், அதற்கு காவலுக்கு நின்ற இரு பவுன்சர்களையும் , முருகேசன், போலி ஆராய்ச்சியாளர் தினேஷ்குமார், போஜராஜன் உள்ளிட்ட கும்பலை கைது செய்தனர்.

விசாரணையில் பித்தளை சொம்பை தீ மூட்டி கரிப்பிடிக்க வைத்து அதனை இரிடியம் என்று கதை அளந்து விட்டுள்ளதும், தங்களை பல கோடிகளுக்கு அதிபதி என்பதை காட்டுவதற்காகவும், பணம் கொடுத்து ஏமாறுபவர்களை சமாதானப்படுத்த கட்டுக்கட்டாக கள்ளநோட்டுக்களை அச்சடித்து தயாராக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இற்றுப்போன பித்தளை சொம்புக்கு பவர் இருப்பதாக காட்டவேண்டும் என்பதற்காக அந்த அறை முழுவதும் பெப்பர் ஸ்பிரே அடித்து வைத்திருந்துள்ளனர். அதனால் தான் அந்த அறைக்குள் நுழைந்ததும் கண்களிலும், உடலிலும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பணத்தை அப்படியே அள்ளிவிடவேண்டும் என்ற பேராசையில் இரிடியத்தை நம்பிச் சென்றால், ஈயம் பித்தளைக்காவது பேரீச்சம் பழம் கிடைக்கும், உங்களுக்கு அதுவும் கிடைக்காது என்பதே நிதர்சனம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments