பேருந்தில் இருந்து திடீரென நிலைத்தடுமாறி படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்... பதறவைக்கும் சிசிடிவி

0 12220

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பேருந்தில் இருந்து  இறங்குவதற்காக நின்று கொண்டிருந்த பெண், பேருந்து வேகமாக வளைவில் திரும்பியதால், திடீரென நிலைத்தடுமாறி படிக்கட்டு வழியாக கீழே விழுந்து உயிரிழந்த பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மகளின் திருமணத்திற்கு பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிய பெண்ணுக்கு கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரி. வருகிற ஞாயிற்றுக்கிழமை மகளுக்கு திருமணம் வைத்திருந்த மகேஷ்வரி, அதற்காக பொருட்கள் வாங்குவதற்காக கழுகுமலை சென்றிருந்தார். பொருட்களை வாங்கிவிட்டு கழுகுமலையில் இருந்து திருவேங்கடம் செல்லும் தனியார் மினி பேருந்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். படிக்கட்டுக்கு நேராக உள்ள ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த மகேஷ்வரி, பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக எழுந்து நின்று தயாரானார்.

அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் எழுந்து நகர்ந்து கம்பியை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாக சென்ற மினி பேருந்து வளைவில் திரும்பிய போது, மகேஷ்வரி கம்பியை பிடித்திருந்த பிடி நழுவி படிக்கட்டு வழியாக கீழே விழுந்தார்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் பேருந்தில் இருந்து கீழே விழுந்த மகேஷ்வரியை கண்டு சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

சாலையில் விழுந்த மகேஷ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சக பயணிகள் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மகேஷ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகேஷ்வரி கீழே விழுந்த காட்சிகள் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. வளைவில் அதிவேகமாக பேருந்தை இயக்கியதால், பெண் நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், மினி பேருந்து ஓட்டுநர் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மினி பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

கணவரை இழந்த மகேஷ்வரிக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கும் நிலையில், மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்த போது, அவரும் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து நின்றபிறகு இறங்க எழுந்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் எனக் கூறும் போலீசார், வளைவுப் பகுதியில் அதிவேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது என அறிவுறுத்துகின்றனர். மேலும், அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு வசதியை ஏற்படுத்தினால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments