அலைபாயுதே காதலனுக்கு அல்வா கொடுத்த காதலி, தலையை இழந்த கணவன்..!

0 6055

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அலைபாயுதே பாணியில் முன்  கூட்டியே கோவிலில் வைத்து திருமணம் செய்த துபாய் காதலனுக்கு டாட்டா காட்டிய இளம் பெண்ணால் நிகழ்ந்த கொடூர சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தினை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரிய ராகவன். 31 வயதான இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.

புதன்கிழமை காலையில் வழக்கம் போல சூரிய ராகவன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்த போது, டிவியுடன் வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் பழுது பார்க்க கொடுத்து விட்டு காத்திருந்தார். அப்போது திடீரென சூரிய ராகவன் மீது மிளகாய் பொடியை எடுத்து வீசி நிலைகுலைய வைத்த அந்த இளைஞர், தான் கையுடன் எடுத்து வந்திருந்த கறிவெட்டும் கத்தியால் சூரியராகவனை வெட்டியுள்ளார். அவர் தடுத்து போராடியதால் வெட்டிய இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், கடையில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற சூரியராகவனின் தலைமுடியை பிடித்து கீழே விழச்செய்ததோடு கத்தியால் சூரிய ராகவன் தலையை துண்டித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்த தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று சூரிய ராகவன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் சூரிய ராகவனை கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது, விளாத்திகுளம் அடுத்த சோழபுரத்தினை சேர்ந்த 22 வயதான ஆனந்தராஜ் என்பது தெரியவந்தது. 4 மணி நேரத்தில் திருச்செந்தூரில் வைத்து ஆனந்தராஜை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் காதல் விவகாரத்தால் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

ஆனந்தராஜும், படர்ந்தபுளி கிராமத்தினை சேர்ந்த உறவுக்கார பெண்ணான மகாலெட்சுமியும் காதலித்து வந்த நிலையில் வேலைக்காக ஆனந்தராஜ் துபாய் சென்றுள்ளார். இந்த இடைவெளியில் படுகொலை செய்யப்பட்ட சூரிய ராகவனுடன் மகாலட்சுமிக்கு 2 வதாக காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையே காதலியை பிரிய மனமில்லாத ஆனந்தராஜ் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். சமையல் மற்றும் இறைச்சி வெட்டும் வேலை செய்து வந்த ஆனந்தராஜை திருச்செந்தூர் கோவிலில் வைத்து மகாலட்சுமி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே சூரியராகவனுடனான காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதை காரணம் காட்டி எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சூரிய ராகவன், மகாலெட்சுமி இருவரும் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். தன்னை அலைபாயுதே ஸ்டைலில் திருமணம் செய்து எமாற்றிவிட்டு, வேறு சாதி இளைஞரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதை பொறுத்துக் கொள்ள இயலாமல் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், சூரியராகவனை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

தங்கள் வீட்டில் டிவி பழுதாகி இருப்பதாக கூறி எலக்ட்ரீசியன் சூரியராகவனை வீட்டுக்கு அழைத்து தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். ஆனால் பணி அதிகமாக இருந்ததால் அவரால் வீட்டிற்கு செல்ல இயலவில்லை. இதையடுத்து டிவியை தூக்கிக் கொண்டு கடைக்கே சென்று கவனத்தை திசைதிருப்பிய ஆனந்தராஜ், தான் திருமணம் செய்த பெண்ணை ஏன் 2 வது திருமணம் செய்தாய் எனக்கேட்டு சூரியராகவனுடன் மல்லுக்கட்டி அவரது தலையை துண்டித்து கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துண்டித்தப்பின் தலையை கையில் வைத்து தூக்கி போட்டு விளையாடிய ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. ஒரே நேரத்தில் இரு இளைஞர்களை காதலித்து ஒருவரை கழற்றி விட்ட இளம் பெண்ணின் விபரீத காதலால் அவரை திருமணம் செய்து குடித்தனம் நடத்திய இளைஞர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments