போலீசில் சிக்கிய "மங்கி கேப்" கொள்ளையன்: தட்டித் தூக்கிய தனிப்படை போலீஸ்!

0 2488
போலீசில் சிக்கிய "மங்கி கேப்" கொள்ளையன்: தட்டித் தூக்கிய தனிப்படை போலீஸ்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரத்தில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த “மங்கி கேப்” கொள்ளையன் தனிப்படை போலீசாரிடம் சிக்கியிருக்கிறான். தனது பைக்கின் முன்பக்கம் மட்டும்  நம்பர் பிளேட் பொருத்திக் கொண்டு கண்கள் தவிர முகம் மொத்தத்தையும் மூடியவாறு பல நாட்கள் போலீசுக்கு போக்கு காட்டி வந்தவன் பிடிபட்ட பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்- ஆசனூர் சாலையில், செட்டித்தாங்கல் அருகே கடந்த மாதம் 23ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சத்யா என்ற பெண்ணை மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவன், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றான்.

அவ்வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் சத்யா புகாரளிக்கவே, அவர்கள் உடனடியாக வாக்கிடாக்கி மூலம் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து உஷார் படுத்தி உள்ளனர். இதற்குள் ரிஷிவந்தியம் பகுதியை கடந்துவிட்ட கொள்ளையனை அங்கு மறைந்திருந்த போலீசார் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், போலீசாரை கண்டதும் அவன் வாகனத்தைத் திருப்பி தப்பிச் சென்றுள்ளான். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

இருபத்தி ஆறு நாட்கள் தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மர்ம நபர் விழுப்புரத்திலிருந்து பல்சர் இருசக்கர வாகனத்தில் வருவதும், விழுப்புரத்தில் இருந்து முகையூர் வரை முகமுடி அணியாமலும், திருக்கோவிலூர் அருகே வரும்போது மங்கி கேப் அணிந்துகொள்வதும் தெரியவந்தது. செயினைப் பறித்துக் கொண்டு செல்லும்போது, பின்பக்க நம்பர் பிளேட்டை பார்த்து விடக் கூடாது என்பதற்காக அதனை கழற்றிவிட்ட கொள்ளையன், முன்பக்க நம்பர் பிளேட்டோடு கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான்.

இதனையடுத்து சம்பவம் நடந்த இடம் அதனை சுற்றியுள்ள இடம் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இறுதியாக அந்த நபர் 24 வயதான விஜி என்பதும் விழுப்புரம் ராமைய்யா நகர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. திருவண்ணாமலை, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இதே போன்று இருசக்கர வாகனத்தில் மங்கி கேப் அணிந்து சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், செஞ்சியில் தனது காதலியை கொலை செய்த வழக்கில் விசாரணை கைதியாக விஜி அவப்போது விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து 18ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு வெளியே வரும்போது போலீசார் அவனை கைது செய்துள்ளனர். எந்த பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட போகிறோமோ, அந்த பகுதிக்கு செல்லும்போது மங்கி கேப் அணிந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளதாகவும், அதேபோல் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டு விட்டால் வாகனதின் நிறத்தையும், பதிவு எண்ணையும் மாற்றி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

விஜியிடமிருந்து 21 கிராம் தங்க சங்கிலியும், 9 கிராம் உருகிய நிலையில் உள்ள தங்கத்தையும் மேலும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் போது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதோடு அவன் பயன்படுத்திய இருசக்கர வாகனம் திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசாரின் ஒரு மாத கால கடும் உழைப்பை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments