பார்சல் வாகனங்களை பதுக்கிவைத்த பெண்.. போலி கொரியர் நிறுவனம் நடத்தி மோசடி

0 8766

பார்சல் மூலம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் இருசக்கர வாகனங்களை, போலியாக கொரியர் நிறுவனம் நடத்தி நூதன முறையில் திருடிய பெண் உட்பட 2 பேரை சென்னை அண்ணா சதுக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரது மகன் குஜராத்தில் பணியாற்றி வருகிறார். சென்னை வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை குஜராத்தில் உள்ள மகனுக்கு அனுப்ப திட்டமிட்ட தனலட்சுமி, பார்சல் நிறுவனங்கள் குறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பெண் குரல், புழலில் உள்ள ஃபாஸ்ட் கார்கோ பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்ற பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் வீட்டுக்கே வந்து வாகனங்களை பெற்று குறைந்த கட்டணத்தில் பார்சல் அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

அவர் சொன்னபடியே சரக்கு வாகனம் ஒன்று வீட்டுக்கு வந்து இரு சக்கர வாகனத்தை பெற்றுச் சென்றுள்ளது. அதனை குஜராத் அனுப்புவதற்கான கட்டணமாக 9 ஆயிரத்து 440 ரூபாயையும் அந்தப் பெண் கேட்டுக் கொண்டபடி கூகுள் பே மூலம் செலுத்தியுள்ளார் தனலட்சுமி. வீட்டிலிருந்தபடி போனிலேயே வேலை சுலபமாக முடிந்தது என்ற நிம்மதியில் இருந்துள்ளார். ஆனால் ஒன்றரை மாதங்கள் கடந்த பிறகும் வாகனம் குஜராத் சென்று சேரவில்லை. பிரவீனாவைத் தொடர்புகொண்டு கேட்டபோதெல்லாம் ஏதேதோ காரணங்கள் சொல்லி சமாளித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது எண் செயல்படாமல் போகவே, தனலட்சுமி போலீசில் புகாரளித்துள்ளார்.

போலீசின் விசாரணையில்தான் Fast cargo packers and movers நிறுவனம் ஒரு போலி நிறுவனம் என்பது தெரியவந்தது. தீவிர தேடுதல் வேட்டையில் பிரவீனாவும் அவரது உதவியாளரான சஞ்சய் என்ற இளைஞனும் சிக்கினர். விசாரணையில் பார்சல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்ட பிரவீனா, அந்த அனுபவத்தை வைத்து, போலியாக பார்சல் சர்வீஸ் தொடங்கியது தெரியவந்தது.

வாகனங்களை பார்சல் அனுப்புவதாக கூறி போனிலேயே டீல் செய்து, ஏராளனமானோரை ஏமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. சோழவரத்தில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து தனலட்சுமியின் வாகனம் உட்பட 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிரவீனா மீது புழல் டிபி.சத்திரம், உள்ளிட்ட காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இருசக்கர வாகனங்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது, அலுவலகத்தை இடமாற்றம் செய்வது, வீட்டு உபயோக பொருட்களை அனுப்பி வைப்பது போன்ற சேவைகளை செய்து வருவதாக விளம்பரப்படுத்தி உள்ளனர். பேக்கர்ஸ் மூவர்ஸ் நிறுவனங்களை இணையதளத்தில் தேடினால் பிரவீனா நடத்தி வரும் போலியான நிறுவனத்தில் இருந்து பொதுமக்களை தொடர்புகொண்டு, வாகனம் அல்லது பொருளை பார்சலில் அனுப்பி வைப்பதாக அணுகுவார்கள். தங்களுடைய பொருட்கள் சென்று சேர்ந்துவிடும் எனக் காத்திருப்பவர்கள், மீண்டும் பிரவீனாவை போனில் அழைக்க முயன்றால் அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றிருப்பார்.

பார்சல் அனுப்பும் வாகனங்களுக்கு காப்பீடு செய்துகொண்டால் சேதாரம் நேர்ந்தாலும் இழப்பீடு பெறலாம் என்று கூறியும் கணிசமான தொகையை கறந்துவிடுவது இதுபோன்ற போலி நிறுவனங்களின் மற்றொரு உத்தி என்கின்றனர் போலீசார்.

இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பிரவீனாவின் மோசடியில் சிக்கி, வாகனங்கள், பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை இழந்திருக்கிறார்கள் என்று கூறும் போலீசார், ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பார்சல் அனுப்ப முயற்சிப்பவர்கள், இணையம் மூலம் அறிமுகமாகும் இதுபோன்ற நிறுவனங்களை அப்படியே நம்பாமல், அவர்களது அலுவலகத்தை நேரில் சென்று பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments