உத்தரகாண்டில் 3 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்... 25 பேர் பலி!

0 2286

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நைனிதால் ஏரி நிரம்பி, சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கட்டடங்கள் மற்றும் வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்தது.நைனிதால் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மனித சங்கிலி அமைத்து ராணுவ வீரர்கள் மீட்டனர்.

நைனிதால் மாவட்டம் முக்தேஸ்வர் என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.ஹல்த்வானி என்ற இடத்தில் கவுலா நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பாலம் உடைந்தது. அப்போது அந்த வழியாக பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை அப்பகுதி மக்கள் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

உத்தம்சிங் நகரிலுள்ள நானக் சாகர் அணை நிரம்பியதை அடுத்து அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டதால், தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்தது.சம்பாவத் என்ற இடத்தில் சல்தி நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

கவுலா நதியிலுள்ள மணல் திட்டான பகுதியில் யானை ஒன்று வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டது. பின்னர் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று யானையை வனப்பகுதி நோக்கி விரட்டி விட்டனர்.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர் தன்சிங் மற்றும் டிஜிபி அசோக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்கள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சரிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.கடந்த 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு பலத்த மழை பெய்ததே பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதற்கு காரணம் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு 25 பேர் வரை பலியாகி இருப்பதாகவும், நைனிடால் மாவட்டத்தில் அதிகம் பேர் உயிரிழந்து இருப்பதாகவும் டிஜிபி அசோக்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments