கல்யாணத்தை மறைத்து காதல்.. விஷயம் தெரிந்ததும் விபரீத முடிவு.. "இன்ஸ்டா" ரீல் அறுந்துபோன சோகம்..!

0 2484

திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதை மறைத்து, இன்ஸ்டாகிராமில் கலர்கலராக ரீல்விட்டு வேறொரு நபரை காதலித்து வந்த பெண், காதல் கைகூடாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலையைச் சேர்ந்த ரெங்கன் - ஐஸ்வர்யா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ரெங்கன் கட்டிட வேலை செய்து வரும் நிலையில், பட்டதாரி பெண்ணான ஐஸ்வர்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அடுத்த கொம்பூதியைச் சேர்ந்த விஜயன் என்பவன் அறிமுகமாகியுள்ளான். இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மாற, ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து, மறந்து ஐஸ்வர்யா விஜயனுடன் பேசி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. நேரில் பார்க்காமல் செல்போனிலேயே காதலை வளர்த்து வந்த இருவரும், ஒரு கட்டத்தில் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்காக, கடந்த 16-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து கணவன், பிள்ளைகளை விட்டுவிட்டு, விஜயனை சந்திப்பதற்காக ஐஸ்வர்யா ராமநாதபுரத்திற்கு வந்துள்ளார். அப்போது, பதிவுத் திருமணம் செய்ய ஐஸ்வர்யாவின் ஆதார் கார்டை வாங்கிப் பார்த்த விஜயனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதில், ரெங்கனின் மனைவி ஐஸ்வர்யா என குறிப்பிடப்பட்டிருந்தை கண்டு தலையில் இடி விழுந்ததை போல் உணர்ந்த விஜயன், ஐஸ்வர்யாவிடம் கேட்கவே, அப்போது தான் தமக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் உண்மையை போட்டு உடைத்த ஐஸ்வர்யா, தனது கழுத்தில் கிடந்த ரெங்கன் கட்டிய தாலியையும் விஜயனிடம் காட்டியிருக்கிறார்.

ஆசை ஆசையாய் பேசிய காதலிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதை தெரிந்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற விஜயன், கல்யாண கனவை அடியோடு அழித்துவிட்டு, ஐஸ்வர்யாவை திரும்பி ஊருக்கு போகச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், ஐஸ்வர்யா அதனை கேட்காததால் டி.கருங்குளத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு தனியாக புறப்பட்டு சென்றிருக்கிறார். இது குறித்து, அந்த உறவினர் ரெங்கனிடமும், காவல் நிலையத்திலும் தகவல் அளிக்கவே, இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ரெங்கனும் ராமநாதபுரம் வந்திருக்கிறார். நடந்ததை மறந்து பிள்ளைகளுக்காக புது வாழ்க்கையை தொடங்கலாம் எனக் கூறி ரெங்கன் அழைத்த போதிலும், அதற்கு மறுத்துவிட்ட ஐஸ்வர்யா விஜயனை தான் திருமணம் செய்துக் கொள்வேன் எனக் கூறி ஒற்றைக் காலில் விடாப்பிடியாக நின்றிருக்கிறார்.

வேறுவழியின்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலுள்ள மனநல ஆலோசனை மையத்தில் ஐஸ்வர்யாவை போலீசார் அனுமதித்தனர். இந்த நிலையில், அதிகாலையில் அங்குள்ள கழிவறையில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ்வர்யா கல்லூரி பயிலும் போது ரெங்கனையும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாக கூறும் போலீசார், நிலையான முடிவெடுக்காமல் கால்போன போக்கிலே மனம் போன கணக்காக, விஜயனையும் திருமணம் செய்ய ஆசைப்பட்டு தற்போது தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments