முன்னாள் சப்- கலெக்டரை கொன்று ப்ரீசர் பாக்ஸ்க்கு ஆர்டர்.. குடிகார இளைஞன் திகில்..! பாட்டில் குடித்தனம் விபரீதம்

0 3378
கடலூரில் குடிக்க பணம் கொடுக்காத முன்னாள் துணை ஆட்சியரைக் கொலை செய்துவிட்டு, சடலத்தை வைக்க ஃப்ரீசர் பாக்ஸ்-க்கு ஆர்டர் கொடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

கடலூரில் குடிக்க பணம் கொடுக்காத முன்னாள் துணை ஆட்சியரைக் கொலை செய்துவிட்டு, சடலத்தை வைக்க ஃப்ரீசர் பாக்ஸ்-க்கு ஆர்டர் கொடுத்த மகனை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில் மெத்தையுடன் வீட்டில் தூங்கிய மகன் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கடலூர் அணைக்குப்பம் மீனாட்சி நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியன். துணை கலெக்டராக பணிபுரிந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். தபால் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்த இவருடைய மனைவியும் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்று நோய் காரணமாக உயிரிழந்துவிட்டார்.

சுப்பிரமணியின் 2 மகன்கள் ஒரு மகள் என 3 பேருக்கு திருமணமாகி வெளியூர் சென்றுவிட்ட நிலையில், செல்லமாக வளர்க்கப்பட்ட மகன் கார்த்தி மட்டும் சுப்பிரமணியன் உடன் வீட்டிலேயே இருந்து உள்ளார். 32 வயதான பொறியியல் பட்டதாரியான கார்த்தி எம்பிஏ வும் படித்து முடித்துள்ளார். மதுவுக்கு அடிமையான இவர் தினந்தோறும் அளவுக்கு அதிகமாக மது குடிப்பதை வழக்கமாக்கியுள்ளார்.

எங்கும் வேலைக்கு செல்லாத இவன், தந்தையின் பென்சன் பணத்தை நம்பியே வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் திங்கட்கிழமை காலை சுப்பிரமணியனின் அலறல் சத்தத்தை அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர். அதன்பிறகு எந்த ஒரு சத்தமும் இல்லாத நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் அரசு மருத்துவமனைக்கு அருகில் சென்று அங்கு உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் தனது தந்தை இறந்து விட்டதாகவும் உடலை வைப்பதற்கு ஃப்ரீசர் பாக்ஸ் வேண்டும் என்றும் கார்த்தி ஆர்டர் செய்துள்ளான். அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர், ஃப்ரீசர் பாக்ஸை ஆம்புலன்ஸ்-இல் வைத்து கார்த்தியை பின்தொடர்ந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு போய் ஃப்ரீசர் பாக்ஸ் வைக்கும் நேரத்தில் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வந்து வீட்டில் சோதனை செய்தபோது, கொடூரமான முறையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு, கைகள் உடைக்கப்பட்டும், கண்ணாடியால் கிழிக்கப்பட்டும் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு கார்த்தி வசித்த அறைக்கு சென்று பார்த்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் காரணம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்களை அடுக்கி வைத்து அதன் நடுவில் படுக்கையைப் போட்டு கார்த்தி படுத்து இருந்தார். மேலும் 100க்கணக்கான காலி சிகரெட் பாக்கெட்டுகளும் அங்கேயே கிடந்து உள்ளன. பல மாதங்களாக அவர் கடையில் இருந்து வாங்கி வந்து சாப்பிட்ட உணவுப் பொட்டலங்களை கூட வீட்டை விட்டு வெளியில் போடாமல் அங்கேயே வைத்துள்ளதைக் கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு கார்த்தியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதைத் தொடர்ந்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டதை போல் நடிப்பதை அறிந்த போலீசார் அவரை வீட்டில் இருந்து கைது செய்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சுப்பிரமணியன் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிணகூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படிப்பு முடிந்த கையோடு வேலைக்குச் செல்லாமல், அளவுக்கதிகமாக கையில் பணம் புழங்கியதால் மதுவுக்கு அடிமையான கார்த்தி, ஒரு கட்டத்தில் தினமும் தந்தையிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். சம்பவத்தன்றும் மதுவுக்கு பணம் கேட்டு அதை கொடுக்க மறுத்த தந்தையை சுப்பிரமணியனை கார்த்திக் கொலை செய்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

படிக்க பணம் கொடுப்பது தந்தையின் கடமை, செல்லமாக வளர்க்கும் மகன் என்பதற்காக கேட்ட போதெல்லாம் அளவுக்கதிகமாக கையில் பணம் கொடுப்பதால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்தச் கொடூர கொலைச் சம்பவம் ஒரு உதாரணம்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments