அரசு ஆஸ்பத்திரி கழிவறை... சுத்தம் செய்வதிலும் ஒப்பந்ததாரர் முறைகேடு... சிக்கிய ஊழல் பெருச்சாலி ஆவேசம்..!

0 3734

பழனி அரசு மருத்துவமனையில் சுகாதாரமில்லா கழிப்பறை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை அழைத்து சுட்டிக்காட்டிய செய்தியாளர்களை, ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் அடிக்கப் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பழனி அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் மற்றும் குப்பைகளை சுத்தப்படுத்துவதற்காக சுமித் என்ற தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இதன் மேற்பார்வையாளராக விக்னேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். திங்கட்கிழமை பழனி அரசு மருத்துவமனைக்கு சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்ய வந்தார். அவரிடம் அரசு மருத்துவமனையில் கழிப்பிடங்கள் சரியாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுவதாக செய்தியாளர்கள் சுட்டிக் காட்டினர்.

இதையடுத்து அங்கு சென்று பார்வையிட்ட சுகாதார செயலாளர் கழிப்பிடம் சுத்தம் செய்யாமல் மோசமான நிலையில் துர்நாற்றம் வீசியதை கண்டு, மருத்துவர்களிடம், நோயை தாங்களே விலைக்கு வாங்குவதாக கடிந்துகொண்டார். உடனடியாக சுத்தம் செய்து பராமரிக்குமாறு ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தனியார் நிறுவனம் தூய்மைப்பணி மேற்பார்வையாளர் விக்னேஷ், செய்தியாளர்களிடம் இது குறித்து ராதாகிருஷ்ணனிடம், சொல்லிக் கொடுத்தது ஏன்? என்று கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயற்சித்தார்.அங்கிருந்தவர்கள் விக்னேஷை தடுத்த நிலையில் அதனை மீறி செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் பேசி அடிக்க பாய்ந்தார்...

உடனடியாக செய்தியாளர்கள், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். உடனடியாக விக்னேஸிடம் விளக்கம் கேட்ட அவர், இதுபோல் இனி நடந்து கொள்ளக்கூடாது என கண்டித்து இருதரப்பினரையும் சமரசம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றார்.சுகாதாரத் துறை செயலாளர் அங்கிருந்து சென்றவுடன் தனியார் நிறுவன ஒப்பந்த மேற்பார்வையாளர் விக்னேஷ் மீண்டும் செய்தியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்த பிற பணியாளர்கள் அவரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.

இதுகுறித்து பழனி டிஎஸ்பி சத்யராஜிடம் செய்தியாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட துணை கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் கழிவறை மட்டுமல்ல, வளாகங்கள் முழுமைக்கும் சுத்தமாக வைத்திருக்க பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் மாதந்தோறும் லட்சங்களை கட்டணமாக பெற்றுவரும் நிலையில், கழிவறையில் கால்வைக்க இயலாத நிலையில் அசுத்தமாக வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதோடு, சுத்தம் செய்வதிலும் முறைகேட்டில் ஈடுபட்ட மேற்பார்வையாளர் விக்னேஷ் மீது, தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments