நடுத்தெருவில் வீசப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள்... தொடப் பயந்த மக்கள்... ஊராட்சி துணைதலைவரின் விலை ?

0 4933

ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்காக லஞ்சமாகக் கொடுத்த 2 லட்ச ரூபாய் பணம் வீதியில் வீசப்பட்டு, சுமார் 10 மணி நேரம் கேட்பாரின்றி கிடந்த அவலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரங்கேறியுள்ளது. 

உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பழைய நன்னாவரம் ஊராட்சியில் துணைத் தலைவர் பதவிக்காக ஆறுமுகம், சந்திரபாபு என இருவர் கடும் போட்டியில் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் சக வார்டு உறுப்பினர்களை பணமழையால் நனைத்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு உறுப்பினர் ஒரு போட்டியாளரிடம் கணிசமாக ஒரு தொகையை லஞ்சமாகப் பெற்றுள்ளார்.

அதேநேரம் மற்றொரு போட்டியாளர் கொடுத்த 2 லட்ச ரூபாயையும் அவர் வாங்கிக் கொண்டுள்ளார். இதுகுறித்து தெரியவந்ததும் முதலில் பணம் கொடுத்த போட்டியாளர், சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பயந்துபோன அந்த உறுப்பினர், பணம் கொடுத்தவரிடமே அதனை திருப்பிக் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதனை அவர் வாங்க மறுக்கவே, 2 லட்ச ரூபாய் பணத்தை அப்படியே வீதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.

சுமார் 10 மணி நேரமாக வீதியில் சிதறிக்கிடந்த அந்தப் பணத்தை வேறு வழியின்றி லஞ்சம் கொடுத்த நபரே வந்து பொறுக்கிச் சென்றுள்ளார். அப்பகுதி ஏழை மக்களும் கூலித் தொழிலாளிகளும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கே இவ்வளவு பணம் விளையாடுகிறதா? என்று வியப்புடன் வேடிக்கை பார்த்தனர்.
பாலிமர் செய்திகளுக்காக உளுந்தூர்பேட்டை செய்தியாளர் ஹரிராஜன்.....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments