பணம் பத்தும் செய்யும்... ஒரு கொலை செய்யாதா என்ன? பெண்ணுக்கு பெண்ணே எதிரியான சம்பவம்!

0 5293

கும்பகோணம் அருகே பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணோடு தனது கணவனைப் தவறாகப் பழகவிட்டு, நகை, பணத்தை பறித்துக் கொண்டு பின் கொலையும் செய்தது எதிர்வீட்டுப் பெண் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பனந்தாள் அடுத்த சிவபுரனியைச் சேர்ந்த அனிதா என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், எதிர்வீட்டுக்காரனான கார்த்திக் என்பவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி, தந்தை, தம்பி ஆகியோருடன் சேர்ந்து அனிதாவை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போலீசாருக்கு மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.

அனிதாவின் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த சத்யாவும், அனிதாவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களும், பள்ளியில் ஒன்றாக படித்தவர்களும் ஆவர். அனிதாவின் கணவர் டேவிட் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், அவரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்துள்ளது. அனிதாவிடம் நட்பு பாராட்டி பேசுவது போல் அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று வந்த சத்யாவுக்கு, அவரிடம் இருக்கும் நகை, பணத்தை பார்த்து அதன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.

கணவன் கார்த்தி கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வரும் நிலையில், குறுக்கு வழியில் பணக்காரியாக திட்டமிட்ட சத்யா அதற்காக கணவனுடன் சேர்ந்து குரூரமான ஒரு திட்டத்தையும் தீட்டியிருக்கிறார். அனிதாவின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதை சாதகமாக்கிக் கொண்ட சத்யா, தன் கணவனை அனிதாவிடம் நெருங்கி பழக வைத்தாக கூறப்படுகிறது.

ஓசியில் காசு கிடைக்கிறதே என்ற பேராசையில் மனைவியின் திட்டத்திற்கு மண்டையை ஆட்டிய கார்த்தி, அனிதாவை பேசி, பேசி நம்ப வைத்திருக்கிறான். சில நேரங்களில் அனிதாவும், கார்த்தியும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும்படி சத்யாவே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும், அதன் மூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏதேதோ காரணங்களை கூறி கொஞ்சம் கொஞ்சமாக அனிதாவிடம் இருந்து நகை, பணத்தையும் கார்த்தி பறித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறாக சுமார் 18 சவரன் வரையிலான நகைகளையும், 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை ஏமாற்றி வாங்கி சுருட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது கணவர் டேவிட் வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு வரவிருப்பதாக கூறி கொடுத்த நகைகள், பணத்தை அனிதா திருப்பி தருமாறு கார்த்தியிடம் கேட்டிருக்கிறார். ஆனால், பணத்தை கொடுக்காமல் கார்த்தி ஏமாற்றி வந்த நிலையில், ஆத்திரமடைந்த அனிதா, பணம், நகைகளை தரவில்லை என்றால் போலீசில் புகாரளிக்கும் நிலை வரும் என கூறியிருக்கிறார். இதனை கார்த்தி, மனைவி சத்தியாவிடம் கூறவே, எங்கு அனிதா போலீசில் புகாரளித்தால் நகையும், பணமும் கையைவிட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில், ஒருபடி மேல போய் அனிதாவை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார் சதிகாரி சத்யா.

கடந்த 12-ந் தேதி வங்கிக்கு சென்ற அனிதாவை தொடர்பு கொண்ட கார்த்தி, தனது வீட்டுக்கு வந்து நகை, பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறி நைசாக அழைத்திருக்கிறான். அங்கு வைத்து, சத்யா, கார்த்தி, கார்த்தியின் தந்தை ரங்கநாதன், தம்பி சரவணன் என நான்கு பேரும் சேர்ந்து, அனிதாவை அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற குழப்பத்தில் ஒரு நாள் முழுவதும் உடலை காரின் டிக்கியில் வைத்துக்கொண்டு ஊர் சுற்றியதாகவும், சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக செல்போனை பாபநாசம் பகுதியில் கொண்டு சென்று போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, சத்யாவின் பிளான் படி, அனிதாவின் உடலை கை, கால்களை கட்டு சாக்கு பைக்குள் போட்டு சோழபுரத்தில் புதர் பகுதியில் குழி தோண்டி புதைத்திருக்கின்றனர். பின்னர், ஒன்றுமே தெரியாதது போல் அனிதாவை காணவில்லை என உறவினர்கள் தேடிய போதெல்லாம் தாங்களும் சேர்ந்து தேடுவது போல் நடித்து நம்ப வைத்திருக்கின்றனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் அனிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பனந்தாள் போலீசார் சத்யா, கார்த்தி அவரது தந்தை ரங்கநாதன், மைத்துனர் சரவணன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments