கேரளாவை பந்தாடிய கனமழை பலியானோர் எண்ணிக்கை 35!

0 3077

கேரளாவை புரட்டிப் போட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. முக்கிய அணைகளின் நீர்மட்டம் அபாய கட்டத்தை நெருங்கும் நிலையில், வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக துலாம் மாதம் முழுவதும் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கேரள அரசு அறிவித்துள்ளது.

கடவுளின் சொந்த தேசம் என கொண்டாடப்படும் கேரளாவை கடந்த 4 ஆண்டுகளாக இயற்கை கனமழை, வெள்ளத்தின் வடிவில் துண்டாடி வருகிறது. கேரளாவின் 10 மாவட்டங்களில் பெய்த கனமழைக்கும், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கி அதிகம் பேர் பலியாகினர். கோட்டயம் மாவட்டம் முண்டயகயத்தில் மணிமலையார் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் வீடு ஒன்று முழுமையாக அடித்துச் செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால், பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடமைகளை அடித்துச் சென்றது.

இடுக்கி மாவட்ம் புல்லம்பாறா அருகே சாலையில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணிகளான தந்தை- மகன் இருவரும் அரசு பேருந்தின் சக்கரத்தில் பிடித்து தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, பேருந்து நடத்துனர் துரிதமாக செயல்பட்டு இருவரையும் மீட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளில் மீட்புப் படைகளும் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 24 மணி நேரமும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாநிலத்தில் 156 வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு சுமார் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையை தொடர்ந்து கேரளாவின் முக்கிய அணையான இடுக்கி அணையின் நீர்மட்டம் அபாய அளவை தொட்டுள்ளதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை எச்சரிக்கையால் துலாம் மாதம் முழுவதும் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில் துலாம் மாத பூஜைகளுக்குப் பிறகு வரும் 21 ஆம் தேதி நடை சாத்தப்படுகிறது. அதற்குப் பிறகு மண்டலம்-மகரவிளக்கு சீசனுக்காக நவம்பர் 15 ஆம் தேதி கோவில் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments