கனமழையால் வெள்ளம் பயிர்கள் பாதிப்பு

0 1600

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையாலும் வெள்ளப் பெருக்காலும் பயிர்கள் சேதமடைந்துள்ளன. திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் பல்வேறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் பெய்ததை விட நேற்று மழையளவு குறைந்தது. இதனால் பேச்சிப்பாறை அணியில் இருந்து நேற்று 16 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஐயாயிரத்து 892 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையிலிருந்து வெளியேற்றும் நீரின் அளவும் நாலாயிரத்து 852 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும் கரையோரமுள்ள விளை நிலங்களில் தேங்கிய நீர் வடியவில்லை இதனால் திக்குறிச்சியில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் வாழை, மரவள்ளி, காய்கறிப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அஞ்சாலிக்கடவு, வைக்கலூர்,பரக்காணி ஆகிய ஊர்களில் ரப்பர், வாழை பயிரிட்டுள்ள தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் தொடர்பான நேர்வுகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். பத்துக்கு மேற்பட்ட மின்மாற்றிகள் பழுதடைந்த நிலையில் அவற்றைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள சாலை மற்றும் வீடுகளை மூன்று நாட்களாக மழைநீர் சூழ்ந்துள்ளது.

கோதையாறு மோதிரமலை அருகே கோதமடக்கு அணைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இறந்த யானைக் குட்டியின் உடல் கரை ஒதுங்கி உள்ளது. களியல் சரக வனத்துறையினர் அங்குச் சென்று விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர் வரத்து, நீர் வெளியேற்றம் ஆகியவற்றைக் கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 136 அடிக்குத் தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நொடிக்கு ஆறாயிரத்து 830 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து 2989 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் 142 அடிக்குத் தண்ணீர் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments