அதிமுக பொன்விழா கொண்டாட்டம்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மரியாதை !

0 2351
அதிமுக பொன்விழா கொண்டாட்டம்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மரியாதை !

அதிமுக பொன்விழாவை ஒட்டி அக்கட்சி தலைமையகத்திலுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

அதிமுக தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, 50ஆவது ஆண்டு தொடங்குகிறது. இதனை கொண்டாடும் விதமாக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, இருவரும் சேர்ந்து அதிமுக கட்சி கொடியை தலைமை அலுவலகத்தில் ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், "மக்கள் தொண்டில் மகத்தான் 50 ஆண்டுகள்" என்ற தலைப்பில் அதிமுக பொன்விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

 

பின்னர் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என சூளுரைத்தார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், கல்வெட்டில் பெயர் பொறித்ததால் சசிகலா பொதுச்செயலாளர் ஆகிவிட முடியாது எனத் தெரிவித்தார். புரட்சித்தாய் என பெயர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு சசிகலா என்ன புரட்சி செய்தார்? என்றும் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.

இதேபோன்று, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிமுக பொன்விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments