கன்னியாகுமரியில் தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த பெருவெள்ளம்... தீவுகள் போல் மாறிய நகரம்!

0 2888

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணைகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்து நாட்களுக்கு மேலாக கொட்டி தீர்க்கும் கனமழை எதிரொலியால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

திக்குறிச்சி, குழித்துறை, வைக்கலூர், காஞ்சாம்புரம், முஞ்சிறை, மங்காடு அருமனை போன்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீட்டை சுற்றிலும் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திக்குறிச்சியில் வீட்டுக்கு முன் தேங்கிய வெள்ளத்தில் பொதுமக்கள் சிலர் குளித்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கீரிப்பாறை, தெரிசனங்கோப்பு, மங்காடு பகுதிகளில் தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் நிரம்பி, அங்கிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கோதையாறு, பரளியாறு, பழையாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

இடைவிடாது பெய்து வரும் கனமழையால் விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கி சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வாழை, ரப்பர், மரவள்ளி கிழங்கு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான திற்பரப்பு அருவியில் தடுப்பு வேலியை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீச்சல்குளம், கல்மண்டபம் பகுதிகள் மூழ்கின.

இருப்பினும், கொரோனா காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக, நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையாறு அணை, சேர்வலாறு அணைகள் நிரம்பியுள்ளன. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20ஆயிரம் கன அடி வீதமாக உள்ள நிலையில், நீர்மட்டமும் ஒரே நாளில் சுமார் 23 அடி உயர்ந்து முழு கொள்ளளவான 131.30 அடியை எட்டி இருக்கிறது. இதே போல் 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 126 -அடியில் இருந்து சுமார் 30 அடி உயர்ந்து 156 அடியை எட்டி நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

களக்காடு தலையணை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments