8 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை.. குட்டிச்சாத்தானான குடிப்பழக்கம்.. நிர்கதியாக நிற்கும் 2 வயது குழந்தை..!

0 4670
8 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை.. குட்டிச்சாத்தானான குடிப்பழக்கம்.. நிர்கதியாக நிற்கும் 2 வயது குழந்தை..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீட்டிலிருக்கும் சிலிண்டரை கூட விற்று மது குடித்த குடிகார கணவனுடன் ஏற்பட்ட தகராறில், 8 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது, சூதுவில் மூழ்கிய கணவனால், 2 வயது பெண் குழந்தை நிர்கதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

சேலம் ஆத்தூர் அருகே முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த தாமரைச் செல்வி என்பவரின் மகள் சோலையம்மாள். கணவனை இழந்து கூலி வேலை செய்து வரும் தாமரைச் செல்வி சிறுக, சிறுக பணம் சேமித்து, மகளை எம்.காம் வரை படிக்க வைத்திருக்கிறார். கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்த சோலையம்மாளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, கூலி வேலை பார்த்து வந்த பிரபாகரன் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, 4 ஆண்டுகளுக்கு முன் தாயின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி பிரபாகரனை சோலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே, 2 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு ரிதன்யா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், மதுவுக்கு அடிமையான பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருக்கும் பொருட்களை விற்று குடிப்பதோடு, சீட்டு விளையாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளான்.

குடும்பத்தை சமாளிக்க வேறு வழி தெரியாமல் தையல் கற்றுக் கொண்டு துணி தைத்து கொடுத்து அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து குழந்தையை கவனித்து வந்திருக்கிறார் சோலையம்மாள். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சோலையம்மாள் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டிலிருக்கும் சிலிண்டரை எடுத்துச் சென்று விற்று பிரபாகரன் மது அருந்திய நிலையில், ஆத்திரமடைந்த சோலையம்மாள் கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி மோதலாக மாறிய நிலையில், மனமுடைந்த சோலையம்மாள், வயிற்றில் இருக்கும் சிசுவை கூட நினைத்து பார்க்காமல் படுக்கை அறையை பூட்டிக் கொண்டு மண்ணெண்ணெயை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டுள்ளார்.

பின்னர், அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து பாதி கருகிய நிலையில் கிடந்த சோலையம்மாளை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சோலையம்மாள் வயிற்றில் இருந்த 8 மாத குழந்தை பிறந்து இறந்த நிலையில், சோலையம்மாள், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன் அவர் வாக்குமூலம் அளித்த காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சோலையம்மாள் இறப்புக்கு அவரது கணவர் தான் காரணம் எனவும் அவர் மீது வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூறியும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அவர்கள் உடலை வாங்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோலையம்மாளை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்துள்ளதாக, ஆய்வாளர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று பிரபாகரன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தததை தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டு, சோலையம்மாள் தீக்குளித்துக் கொண்டதாக பிரபாகரனின் தம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். குடிகார கணவனின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர்களது 2 வயது பெண் குழந்தை நிர்கதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments