ஹெல்மெட் போடச்சொன்னா சாலையில் எட்டு போடுறாங்க..! தப்பிச்செல்ல டிப்ஸ் தர்ராங்கலாம்..!

0 2584

ஈரோட்டில் காவல்துறையினர் நடத்திய இருசக்கர வாகன சோதனையின் போது, ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் போலீசுக்கு பயந்து வாகனங்களை உருட்டிக் கொண்டும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு வழிச்சாலையில் யூடர்ன் அடித்துத் திரும்பியும் சென்ற சம்பவம் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது..

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1122- சாலை விபத்துக்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 80-சதவீதம் இரு சக்கர வாகன விபத்துக்கள். இந்த விபத்துகளில் லேசான காயங்களுடன் தப்பியிருக்க வேண்டிய பலர் தலைக்கவசம் அணியாத காரணத்தாலேயே உயிரிழந்துள்ளனர்.

நடப்பாண்டில் இதுவரை 2000க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்திருப்பதுடன், உயிர்ப்பலியும் அதிகரித்துள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யபடும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.

அதன்படி புதன்கிழமை காலை முதல் ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் மேற்பார்வையில் 5-காவல் ஆய்வாளர்கள் 5- காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்தறையினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தங்களது உயிரைக் காக்கவே, காவல்துறையினர் கண்டிப்புடன் சாலையில் நின்று வழக்குப் போடுகிறார்கள் என்பதை உணராத வாகன ஓட்டிகள், தப்பிச் செல்ல புதுப் புது யுக்திகளை கையாண்டனர்.

'சிறுத்தை சிக்கும்- சில்வண்டு சிக்காது' என்பது போல காவல்துறையின் வாகன சோதனைக்கு பயந்து, வந்த வழியாகவே ஒருவழிச் சாலையில் யூடர்ன் போட்டு திரும்பிச் சென்றனர்.

காவல்துறையினர் அசந்த நேரத்திலும், போக்குவரத்து சிக்னல் திறக்கப்பட்ட போதும் பெரிய வாகனங்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டும் தப்பிச் சென்றனர்

இன்னும் சில விஞ்ஞானிகள் வாகனங்களை ஓட்டி வந்தால் தானே காவல்துறையினர் பிடிப்பார்கள் என்று, காவல்துறையினர் முன்பு இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டே சென்றனர்.

காவல்துறையினரின் வாகன சோதனைக்குப் பயந்து, பழைய குப்பையில் கிடந்த தரமற்ற தலைக்கவசங்களை சிலர் அணிந்து கொண்டும், சிலர் வாகனங்களை வேகமாக ஓட்டிச் சென்றும் காவல்துறையினருக்கு போக்குக் காட்டினர்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முதல்நாள் வாகன சோதனையில், தலைகவசம் அணியாமல் சென்ற 2500-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2-லட்சத்து 30-ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 1500-க்கும் மேற்பட்ட இரண்டு சக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யபட்டன. கடைக்குச் சென்று புதியதாக தலைக்கவசத்தை வாங்கிவந்து காண்பித்தவர்களிடம் வாகனங்கள் உடனடியாக வழங்கப்பட்டன.

அதே நேரத்தில் தலைக்கவசம் உயிர் கவசம் என்பதை உணர்ந்து, இரு சக்கர வாகன ஓட்டிகள் தாங்களாகவே முன்வந்து அணியாதவரை இந்த திருடன்- போலீஸ் விளையாட்டுக்கு எண்டே கிடையாது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments