பாம்பை வைத்து கொலை.. கொடூர கணவனுக்கு நீண்ட நாள் சிறை..!

0 2713
பாம்பை வைத்து கொலை.. கொடூர கணவனுக்கு நீண்ட நாள் சிறை..!

கேரளாவில் மாற்றுத் திறனாளி மனைவி உத்ராவை பாம்பு கடிக்க வைத்து கொன்ற வழக்கில் கணவன் சூரஜூக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனையும், அதனை தொடர்ந்து இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை வழக்கில் நீதிமன்றம் கணவன் சூரஜுக்கு கடும் தண்டனை விதித்துள்ளது. பாம்பு கடி மூலம் உத்ராவுக்கு விஷம் கொடுத்தது, தடயங்களை அழிக்க முயன்றது ஆகிய குற்றங்களுக்காக 17 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர், கொலை மற்றும் கொலை முயற்சி குற்றங்களுக்காக 2 ஆயுள் தண்டனைகளை அவன் அனுபவிக்க வேண்டும் என கொல்லம் ஆறாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி எம்.மனோஜ் தீர்ப்பு வழங்கினார். சூரஜுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் அவர் அறிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி இரவு கொல்லம் மாவட்டம் அஞ்சலில் உள்ள வீட்டில், உத்ரா பாம்பு கடிக்கு ஆளாகி மறுநாள் காலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஏற்கனவே ஒருமுறை பாம்பு கடிக்கு ஆளான உத்ரா மீண்டும் பாம்பு கடித்து இறந்ததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கொல்லம் ரூரல் எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். இரண்டாம் திருமணத்திற்கு உத்ரா தடையாக இருந்தார் என்பதால் அவரை கொல்ல கணவன் சூரஜ் திட்டமிட்டதாக, பெண்ணின் பெற்றோர் தங்கள் புகாரில் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கணவன் சூரஜ் திட்டமிட்டு பலவந்தமாக பாம்பை வைத்து உத்ராவை கடிக்க வைத்ததை அறிவியல் பூர்வமாக நிரூபித்தனர். இதனைத் தொடர்ந்து, 27 வயதான சூரஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வாதாடியது. இந்த வழக்கில் அவன் குற்றவாளி என கடந்த திங்கள் கிழமை தீர்ப்பளித்த நீதிபதி இன்று தண்டனை விவரங்களை அறிவித்தார். 17 ஆண்டு சிறைத் தண்டனையும், அதனை தொடர்ந்து இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கொல்லம் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

17ஆண்டுகளும் அதன் பிறகு இரட்டை ஆயுளும் அனுபவிக்க வேண்டி உள்ளதால், சூரஜ் எஞ்சிய தன் வாழ்நாள் முழுதும் சிறைப்பறவையாக இருக்கும் நிலை உருவாகி உள்ளது.  சூரஜுக்கு பாம்பை கொடுத்த பாம்பாட்டி முதலில் குற்றவாளிப்பட்டியலில் சேர்க்கப்பட்டாலும் பின்னர் அரசு தரப்பு சாட்சியாக மாறினார். இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் உத்ராவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். கேரளாவில் பாம்பை கடிக்க வைத்து நடத்தப்பட்ட முதலாவது கொலை என்பதும், கொலை வழக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments