வாக்கு என்னும் மையத்திற்குள் பூஜை பொருட்களை எடுத்து சென்ற வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் - தடுத்து நிறுத்திய போலீசார்..!

0 1342

செங்கல்பட்டு  மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற, வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் மந்திரித்த பூஜைப் பொருட்களுடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனர்.

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்லும் வேட்பாளர்களும், அவர்களின் ஏஜெண்டுகளும் செல்போன் உட்பட எந்த பொருளையும் கொண்டு செல்லக்கூடாது என உத்தரவு உள்ளது.

திருக்கழுகுன்றம் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை மையம் மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் அமைந்துள்ளது. அந்த மையத்திற்கு உள்ளே செல்லும் ஏஜெண்டுகளை கடும் சோதனைக்குப் பிறகே காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். சிலர் செல்போனை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து அனுப்பி வைத்தனர்.

சிலர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தங்களது இஷ்ட தெய்வத்திற்கு பூஜை செய்து கொண்டு வந்த பூ, பழம், குங்குமம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு சென்றனர். இந்தப் பொருட்களை கொண்டு சென்றால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் அதனை மறைத்து வைத்து உள்ளே எடுத்துச் செல்ல முயன்றனர். அவற்றை சோதனை செய்து பறிமுதல் செய்த போலீசார், எந்த பொருளையும் உள்ளே கொண்டு செல்லக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இன்னும் சிலர், மூக்குப் பொடி டப்பா, ஹான்ஸ் பாக்கெட் போன்ற புகையிலைப் பொருட்களை கொண்டு செல்ல முயன்றனர்.

வாக்கு எண்ணிக்கை இரவும் தொடர்ந்து நடந்த போதும் கூட கூட்டம் கலையாமல் அப்படியே இருந்தது. இரவில் பலத்த மழை பெய்த போதும் கூட்டம் அங்கிருந்து கலைந்து போகவில்லை. மேலும் இந்த மழைக்கு தப்பிக்க கல்லூரி முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து திடீர் குடை ஆக்கும் நிலையும் காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments