காதலனிடம் இருந்து பெண்ணை பிரித்து இழுத்துச்சென்ற தந்தை.. காரை மறித்து மீட்ட போலீசார்..!

0 4397

சாதி மறுப்பு திருமணத்தை தடுத்து நிறுத்திய பெற்றோர், சார்பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்து போடும் போது சினிமா பாணியில் தங்கள் பெண்ணை மீட்டு இழுத்துச் சென்று காரில் ஏற்றினர். விரட்டிச்சென்ற காதலன், காரை மறித்து, போலீஸ் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த பெண்ணை மீட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது...

நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்து இளம் பெண் ஒருவரை வெளியே இருவர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றனர். அந்தப்பெண் அழுதபடியே மாமா விட்டுடுங்க ... என்று கதறி அழுதவாறே சென்றார்.

கழுத்தில் மஞ்சள் தாலியுடன் அழுகையுடன் சென்ற அந்தப்பெண்ணின் முகத்தில் தெரிந்த பதற்றம் அங்கிருந்தவர்களை, என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்க வைத்தது. சில பெண்கள் அந்த பெண்ணை அழைத்து வந்தவர்களை தடுக்க, உடனடியாக தடுத்த பெண்ணின் காலில் விழுந்து எங்க பெண்ண கூட்டிட்டு போறோம் விட்டுடுங்க என்று கெஞ்சினார்...

அப்போது, நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பெண் காவலர் ஒருவர், அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்வதற்காக தட்டிக்கேட்டார். அருகில் நின்றவர் தன்னை அந்த பெண்ணின் தந்தை என்றும் தலையாரியாக இருப்பதாகவும் கூறி போலீசின் கையை தட்டிவிட்டு பெண்ணை வலுக்காட்டாயமாக காரில் அழைத்துச்செல்வதில் வேகம் காட்டினார்.

அதற்குள்ளாக பெண் காவலர், செல்போன் மூலம் சக போலீசாருக்கு தகவல் அளித்தார். அதற்குள் அங்கு வந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பெண் ஏற்றப்பட்ட காரை வழிமறித்தனர். காருக்குள் இளம் பெண் கதறியபடி இருந்தார்

கூடுதல் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை அவரது உறவினர்களிடம் இருந்து மீட்டு நீதிபதி முன் ஒப்படைத்தனர். அதன் பின்னர் பலத்த பாதுகாப்புடன் வெளிப்பாளையம் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

தங்கள் வீட்டுப்பெண்ணை மதன்ராஜ் என்பவர் கடத்தி வந்து தாலிக்கட்ட முயன்றதாகவும், தாங்கள் காப்பாற்றி மீட்டு அழைத்துச்சென்றதாகவும், கடத்திய மதன்ராஜ் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெண் வீட்டார் தரப்பில் புகார் அளித்தனர். இதுகுறித்த விசாரணையில் காதல் திருமணம் செய்த ஜோடியை சினிமா பாணியில் பெண் வீட்டார் பிரித்து அழைத்துச் சென்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த 23 வயதான பாரதி என்ற அந்த பெண்ணும், அவருடன் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த செம்பியன்மாதேவி கிராமத்தை சேர்ந்த மதன்ராஜ் என்ற இளைஞரும் மருத்துவமனையில் மலர்ந்த காதலுக்கு மரியாதை செய்யும் விதமாக சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். ஒரு கோவிலில் வைத்து காதலி பாரதிக்கு தாலி கட்டிய மதன்ராஜ் திருமணத்தை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தனது காதல் மனைவியுடன் மதன்ராஜ், நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு பதிவு திருமணம் செய்து இறுதியாக கையெழுத்து போடும் நேரத்தில், அங்கு அதிரடியாக புகுந்த பெண்ணின் உறவினர்கள், பெண்ணை அடித்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாக மதன்ராஜ் தரப்பில் போலீசில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பாரதி மேஜர் என்பதால் அவரது விருப்பமே பிரதானமாக பார்க்கப்பட்டது. அவர் காதலன் மதன்ராஜுடன் செல்வேன் என்று திட்டவட்டமாக கூறியதால் போலீசார் கடத்தல் புகாரை ரத்து செய்து, இளம்பெண் பாரதியை, அவரது காதல் கணவர் மதன்ராஜுடன் அனுப்பி வைத்தனர்.

நீண்ட சட்டபோரட்டத்திற்கு பின்னர் காதல் மனைவியின் கரங்களை பற்றிக் கொண்டு காதலன் மதன்ராஜ் தனது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுச்சென்றார். அங்கிருந்தவர்கள் காதல் தம்பதிக்கு வாழ்த்துகளை கூறி வழியனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments