பிக் பாஸ் வீட்டிற்குள் மோதல்.. காயத்துடன் வெளியேறிய நமீதா மாரிமுத்து..!

0 102299
பிக் பாஸ் வீட்டிற்குள் மோதல்.. காயத்துடன் வெளியேறிய நமீதா மாரிமுத்து..

ஒட்டுமொத்த திருநங்கைகளின் பிரதி நிதியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக பெருமிதத்துடன் கூறிய நமீதா மாரிமுத்து,  பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்துடன் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள சென்றவருக்கு கொரோனா என்று தகவல் பரவிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சமூகத்தில் பிரபலமில்லாதவர்களையும் பிரபலப்படுத்துவதற்காக ஒரு வீட்டில் 100 நாட்கள் அடைத்து வைத்து அவர்களின் குணாதிசயங்களை கேமரா வைத்து ஊருகே காட்டும் பிக் பாஸ் என்ற பொழுது போக்கு நிகழ்ச்சியின் 5 வது சீசன் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் போட்டியாளராக அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கை நமீதா மாரிமுத்துவை இந்த வாரம் காணவில்லை..! தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வெளியேறியதாக சொல்லப்பட்டது.

பிக்பாஸ் வீட்டில் வைத்து நமீதா மாரிமுத்துவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாகவும், பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை தரப்பில் விசாரித்த போது அவருக்கு கொரொனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

கடந்த 8 ந்தேதி அன்று பூந்தமல்லி ஈ.வி.பி பிலிம்சிட்டியில் உள்ள பிக் பாஸ் வீட்டில் இருந்து காயங்களுடன் வெளியேறிய திருநங்கை நமீதா மாரிமுத்து, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். காயத்திற்கான முதல் உதவி சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் அவரை அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்போர் தங்களுக்கு என்ன விதமான பாதிப்புகள் மற்றும் அவமானங்கள் நிகழ்ந்தாலும் நிகழ்ச்சி 100 நாட்கள் முழுமை பெறும் வரை அந்த நிகழ்வு குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்பது ஒப்பந்தம். அதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவதால் சென்னையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் நமீதா மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் செலவில் அவர் ஓட்டலில் தங்கி இருப்பதாகவும், இதனை மறைக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நமீதாவுக்கு கொரோனா என்று தகவலை கசியவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

சமூகத்தால் திருநங்கைகள் என்று புறக்கணிக்கப்பட்டாலும் அனைத்து திரு நங்கைகளின் சார்பாக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக ஆனந்த கண்ணீர் சிந்த பேசி பார்வையாளர்களை கவர்ந்த நமீதா மாரிமுத்துவுக்கும், சக போட்டியாளரான தாமரை செல்வி என்பவருக்குமிடையே நீடித்து வந்த வார்த்தைபோர் முற்றிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் நடந்த மோதல் சம்பவத்தில் நமீதா மாரிமுத்துவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

வழக்கமாக இது போல சண்டையிடும் நபர்களை வைத்து பார்வையாளர்களை அதிகப்படுத்தும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், இந்த முறை நமீதா மாரிமுத்துவின் நடவடிக்கைகள் சக போட்டியாளர்களுக்கும் அதிருப்பதியை ஏற்படுத்தியதால் வேறு வழியின்றி போட்டியை விட்டு வெளியேற்றி தனியாக அறை எடுத்து ஓட்டலில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

நமீதா மாரிமுத்து காயத்துடன் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை எடுக்க வந்ததை உறுதி செய்யும் காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக இரு தரப்பில் இருந்தும் புகார் ஏதும் வராததால் அது தொடர்பாக நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் திருநங்கைகளின் வாழ்வு மேம்பட அரசு பல திட்டங்களை முன் எடுத்தாலும், சமூகத்தில் மட்டுமல்ல பல லட்சம் மக்கள் பார்க்ககூடிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட திருநங்கைகளை சகிப்புத்தன்மையுடன் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் உருவாகவில்லை என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments