பாம்பை கடிக்க வைத்து மனைவி கொலை.. கணவன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு..!

0 3991
பாம்பை கடிக்க வைத்து மனைவி கொலை.. கணவன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு..!

கேரள மாநிலத்தில் மனைவியை பாம்பை வைத்து கொலை செய்த வழக்கில் கணவன் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது...

கொல்லம் அருகேயுள்ள அஞ்சல் பகுதியை சேர்ந்த உத்ரா என்ற மாற்றுத்திறனாளி பெண் 2020 ஆம் ஆண்டில் நல்ல பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். இதனை அடுத்து உத்ராவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.உத்ரா உயிரிழப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் தான் பாம்பு கடித்து தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்தார். இந்நிலையில் மீண்டும் பாம்பு கடித்து, உத்ரா உயிரிழந்ததால் அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.

அடுத்தடுத்து இரு முறை பாம்பு கடித்தது எப்படி என்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், உத்ரா இறந்த ஒரு வாரத்துக்கு பிறகு கணவன் சூரஜ், நாக கடவுளை மகிழ்விக்க சர்ப்ப பூஜை நடத்தியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினருக்கு சூரஜ் மீது சந்தேகப் பார்வை திரும்பியது.

முதன்முறையாக சூரஜ் வீட்டில், முதல் மாடியில் ஏ.சி அறையில் உத்ரா உறங்கிக் கொண்டிருந்த போது, கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. கண்ணாடி விரியன் பாம்பு மரம் ஏறும் வழக்கம்முடையது கிடையாது. அதனால், அருகில் இருந்த மரத்தின் வழியாக ஏறி ஜன்னலுக்குள் நுழைந்திருக்க முடியாது என்கிற சந்தேகமும் போலிசாருக்கு எழுந்தது.

இரண்டாவதாக உத்ராவை அவரின் பெற்றோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாம்பு கடித்தது. இறந்து போன உத்ரா உறங்கிக் கொண்டிருந்த அறையில் இருந்த ஜன்னல் 150 செ.மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து போலீசாரின் விசாரணையின் போது, 50 சென்டி மீட்டர் உயரம் கூட பாம்பால் ஏற முடியாதது கண்டறியப்பட்டது.

மேலும், பாம்புகளை யாராவது வம்படியாக சீண்டினால் மட்டுமே எதிரியை கொல்லும் நிலையில், உறங்கிக் கொண்டிருந்த உத்ராவின் உடலில் இரண்டு முறை அடுத்தடுத்து நாகப்பாம்பு தீண்டியிருந்தது. இதையடுத்து, சூரஜை விசாரணை வளையத்துக்குள் போலீஸ் அதிகாரிகள் கொண்டு வந்தனர்.

சாதாரணமாக பாம்பு கடித்தால், 2 சென்டிமீட்டர் வரையிலான அகலத்தில் பல் தடம் பதிவாகும். ஆனால், உத்ராவின் உடலில் பாம்பு கடித்த பல் தடம் 2.5 செ.மீ முதல் 2.8 செ.மீட்டர் அகலத்தில் பதிவாகியிருந்தது. யாராவது பாம்பை தலையை பிடித்து அமுக்கி கொட்ட வைத்தால் மட்டுமே இவ்வளவு அகலத்தில் பல் தடம் பதிவாகும் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை உறுதிப்படுத்த உத்ரா போன்ற பொம்பை ஒன்று செய்து, அதில் நாகப்பாம்பை விட்டு கடித்த வைத்து, அந்த வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து சூரஜின் குற்றச்செயல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சூரஜ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments