துப்பாக்கிக் கொள்ளையன் என்கவுண்ட்டர்... முடிவுக்கு வந்த 32 மணி நேர ஆபரேஷன்..!

0 5661

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்ணிடம் நகைப்பறித்துவிட்டு காட்டுப் பகுதியில் ஒளிந்திருந்த வடமாநில துப்பாக்கிக் கொள்ளையர்களில் ஒருவன் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளான். ஒரகடம் அருகே டாஸ்மாக் கடை ஊழியரை படுகொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்ற இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கடந்த 4ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பும் போது, டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் என்பவர், மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான அவரது சக ஊழியரான இராமு என்பவர், முதுகில் பாய்ந்த குண்டுடன், தப்பிச் சென்றார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இராமுவின் உடலில் துப்பாக்கிக் குண்டு இருப்பது எக்ஸ்ரேவில் தெரியவந்ததை அடுத்து, உடனடியாக சென்னை இராஜுவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் குண்டு அகற்றப்பட்டது.

இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் பேருந்தில் ஏற முயன்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களைத் தடுக்க முயன்ற அப்பகுதி இளைஞர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விட்டு 3 பேர் கொண்ட அந்த வடமாநில கும்பல் அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் தப்பியோடியது.

அவர்களது கையில் துப்பாக்கி இருந்தது தெரியவந்ததை அடுத்து, டாஸ்மாக் ஊழியர் கொலையில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார், இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தங்கி வேலை செய்து வந்த வடமாநில இளைஞர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு தங்கி இருந்தவர்களை கணக்கெடுத்தபோது, அவர்களில் 3 பேர் மட்டும் மாயமானது தெரியவந்தது. அவர்களது அறைகளை சோதனையிட்டபோது, ஏராளமான பணம், நகை, வெள்ளிப் பொருட்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்குள் காட்டுப் பகுதிக்குள் ஒளிந்திருந்த கொள்ளையர்களைப் பிடிக்க, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். டிரோன் கேமராக்களைப் பறக்கவிட்டு கண்காணித்தவாறே, நான்கு புறமும் சுற்றி வளைத்தனர்.

ஒரு கட்டத்தில் தங்களை நெருங்கிவிட்ட போலீசாரை நோக்கி, தாங்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் கொள்ளையர்கள் சுட்டதாக கூறப்படுகிறது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்த முயன்றதில் 2 போலீசார் காயமடைந்தனர்.

இதனையடுத்து போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முத்தஷா என்ற கொள்ளையன் உயிரிழந்தான். மற்ற இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments