"தவிடுபொடியான தற்கொலை நாடகம்... மனைவியைக் கொன்ற மன்மதன் கைது"

0 3674

திருப்பத்தூர் அருகே காதல் மனைவியை எரித்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்டு நாடகமாடிய கொடூர கணவன் தனது தோழியுடன் கைது செய்யப்பட்டுள்ளான். மொட்டை அடித்து உருவத்தை மாற்றிக் கொண்டு தஞ்சையில் ஒளிந்திருந்தவன் செல்போன் சிக்னல் மூலம் சிக்கியுள்ளான். 

திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, தனது காதல் மனைவி திவ்யாவை கோவிலுக்குச் செல்லலாம் என அழைத்துச் சென்று, மயக்க மாத்திரை கொடுத்து, அவர் மயங்கியதும் பெட்ரோல் ஊற்றிக் கொன்றுவிட்டு தலைமறைவானான்.

உயிருக்கு போராடிய நிலையிலும், நடந்த விவரங்களை திவ்யா போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாகவும் தனக்குப் பிறகு மனைவியை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்பதால் அவரை தீ வைத்து எரித்துவிட்டு, தானும் சாகப்போவதாகவும் எனவே உடலை தேட வேண்டாம் என்றும் சத்தியமூர்த்தி வீடியோ வெளியிட்டிருந்தான்.

இந்த வீடியோவின் மீது நம்பிக்கையில்லாத போலீசார், சத்தியமூர்த்தியை தொடர்ந்து தேடி வந்தனர். ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு வரும் இளம் பெண்கள் பலரையும் தனது காதல் வலையில் வீழ்த்தி, சத்திய மூர்த்தி ஊர் சுற்றி வந்தவன் என்ற தகவல் தான் போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இந்த நிலையில்தான் சத்திய மூர்த்தியின் கார் சென்னை போரூரிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டது. தொடர்ச்சியான விசாரணையில் போலீசார் சந்தேகித்தபடியே, அந்தக் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வந்த அர்ச்சனா என்ற பெண்ணுடன் சத்திய மூர்த்தி தலைமறைவானது தெரியவந்தது. தன்னிடம் ஓட்டுநர் பயிற்சி பெற வந்த அர்ச்சனாவை மயக்கி, திருமணம் செய்து புதிய வாழ்க்கையை தொடங்க முடிவெடுத்தவன், அதற்காக திவ்யாவை கொலை செய்துவிட்டு, தஞ்சைக்குச் சென்று தஞ்சம் புகுந்ததும் தெரியவந்தது. அர்ச்சனாவின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில்தான் தனது பழைய செல்போனில் புதிய சிம் கார்டை போட்டு ஆன் செய்யும்போது, போலீசாரிடம் சிக்கி இருக்கிறான் சத்தியமூர்த்தி. அர்ச்சனாவையும் குழந்தையையும் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், சத்தியமூர்த்தியை திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments