பஜாஜ் ஃபைனான்ஸை ஏமாற்றிய பலே கில்லாடிகள்... பல லட்சம் ரூபாய் மோசடி..!

0 42731

சென்னையில் வீட்டு உபயோக பொருட்களை விற்கும் பல நிறுவனங்களில், வாடிக்கையாளர்கள் பலரின் ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி பொருட்களை வாங்கி மோசடி செய்த விவேக்'ஸ் நிறுவன ஊழியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்களை நடுத்தர மக்களும் வாங்கும் வகையில் தவணை முறைத் திட்டத்தை பஜாஜ் பைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன.

பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களைப்பற்றிய தகவல்களை ஆவணங்களோடு சமர்ப்பித்து, பொருட்களை வாங்கிக்கொண்டு தவணை முறையில் பணத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்த பஜாஜ் ஃபைனான்ஸ் மூலம் தவணை முறையில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களில் ஒருவரான கரூரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர், தனது ஆவணங்களை யாரோ தவறாக பயன்படுத்தி பொருட்களை வாங்கியுள்ளதாகவும், இதனால் மாத தவணை தனது வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்படுவதாகவும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை அணுகி முறையிட்டுள்ளார்.

இதுகுறித்து நிறுவனத்தின் சார்பில் ஆய்வு செய்ததில்,பஜாஜ் பைனான்ஸ் மூலம் மாதத் தவணையில் பொருட்களை வாங்கியுள்ள பல வாடிக்கையாளர்களின் ஆவணங்களை முறைக்கேடாகப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கந்தன்சாவடியில் உள்ள விவேக்'ஸ் விற்பனையகத்தில் பணியாற்றும் வீரமணி என்ற ஊழியர் தனது கூட்டாளியான ஸ்டீபன் என்பவர் மூலம் போலி ஆவணங்களை சமர்பித்து பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பெயரில் பல பொருட்களை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தான் பணிபுரியும் கந்தன்சாவடி விவேக்ஸ் கிளையிலேயே ஏராளமான பொருட்களை மோசடியாக வீரமணி வாங்கியுள்ளான்.

வீரமணிக்கும் ஸ்டீபனுக்கும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய அனுபவம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனை வைத்து, வாடிக்கையாளர்களின் ஆவணங்களான ஆதார், பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு ஆகியவற்றை முறைகேடாகப் பயன்படுத்தி முன் பணம் செலுத்தாமல் பொருட்களை வாங்கியுள்ளனர்.

இதே போன்று போலி ஆவணங்களை கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விவேக்'ஸ் ஷோரூமில் மட்டுமல்லாமல் சுமார் ஒன்பது ஷோரூம்களில் இதே பாணியில் இருவரும் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

ஸ்டீபனையும் வீரமணியையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ள போலீசார், மற்ற ஷோரூம்களில் எவ்வளவு மோசடி செய்துள்ளார்கள் என்பது குறித்து அறிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments