"அணையா விளக்கால்" அணைந்த குடும்பம்.. தம்பதி உயிரிழப்பில் புதிய திருப்பம்

0 4055
மதுரையில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பற்றி தம்பதி இறந்ததாகக் கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பமாக, நவராத்திரி கொலுவில் வைக்கப்பட்ட அணையா மின்விளக்கில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது தடயவியல் நிபுணர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பற்றி தம்பதி இறந்ததாகக் கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பமாக, நவராத்திரி கொலுவில் வைக்கப்பட்ட அணையா மின்விளக்கில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது தடயவியல் நிபுணர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மதுரை ஆனையூரைச் சேர்ந்த சக்திகண்ணன் - சுபா தம்பதி வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஏசி இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி உயிரிழந்தனர் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தடயவியல் நிபுணர்களின் தீவிர ஆய்வில், நவராத்திரி கொலுவில் வைக்கப்பட்ட மின்விளக்கில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வீட்டு மாடியில் உள்ள அறையில் 5 அடுக்கு கொண்ட கொலு மேடையை உருவாக்கி, அதில் கொலுபொம்மைகளை வைத்து, மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

குறிப்பாக கொலு பொம்மைகளுக்கு நடுவே தொடர்ச்சியாக ஒளிரும் வகையிலான மின் விளக்கு ஒன்றை பொருத்தி இருந்ததாகவும் சம்பவத்தன்று பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தபோது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து, மின் விளக்கில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. மின் ஒயர்களிலும் பற்றிய தீ, பொம்மைகளுக்கு அருகிலிருந்த அலங்கார பேப்பர்களிலும் பரவி, அறை முழுவதும் புகை சூழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கண் விழித்த தம்பதி, குளியலறையில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து தீயை அணைக்க முயன்றுள்ளதாக, தடயவியல் நிபுணர்கள் கூறியதாக, போலீசார் தெரிவிக்கின்றனர். இதற்குள் அறையிலிருந்த ஏசி இயந்திரத்தில் தீப்பற்றி, அதிலிருந்த கேஸ் வெளியாகி கரும்புகை சூழ்ந்ததாகக் கூறுகின்றனர் போலீசார். இதில் கண் எரிச்சல் ஏற்பட்டு, தம்பதி இருவரும் கூச்சலிடத் தொடங்கியுள்ளனர். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த இருவர் மீதும் தீப்பற்றி உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உரிய கவனமின்றி செயல்பட்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்திருப்பதாகக் கூறும் தீயணைப்புத்துறையினர், கொலு மேடைகளில் எளிதில் தீப் பற்றக்கூடிய பொருட்களை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர். அதேபோல் மின் பணியாளர்கள் அல்லது மின்னியல் நிபுணர்களின் ஆலோசனை இன்றி தற்காலிக மின் அமைப்புகளை தன்னிச்சையாக ஏற்படுத்துவதும் தவறு என்றும், தீயணைப்புத்துறையினர் தெரிவிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments