பட்டபகலில் பெண்ணிடம் போதையில் ரகளை... மாணவர்கள் அட்டகாசம்..! சிசிடிவி காட்சியால் சிக்கினர்

0 3388
காரைக்குடியில் உள்ள ஓட்டலில் வைத்து பெண்ணின் தலையில் இருந்த பூவைபிடித்து இழுத்து போதையில் ரகளை செய்த அழகப்பா கல்லூரி மாணவர்கள், தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

காரைக்குடியில் உள்ள ஓட்டலில் வைத்து பெண்ணின் தலையில் இருந்த பூவைபிடித்து இழுத்து போதையில் ரகளை செய்த அழகப்பா கல்லூரி மாணவர்கள்,  தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சண்டையில் தவறவிட்ட செல்போனுக்கு போலீசில் புகார் அளித்து கம்பி எண்ணும் மாணவ தம்பிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா கலைக்கல்லூரி மாணவர்கள் இருவர் அழகப்பபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில் தாங்கள் நண்பர்களுடன் காரைக்குடி ரயில்வே சாலையில் உணவகம் நடத்தி வரும் அந்தோணிசாமி என்பவரது உணவகத்திற்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் சாப்பிடச்சென்றதாகவும், சாப்பிட்டி விட்டு வரும் போது தங்களது இரு செல்போன்களை மறந்து விட்டு வந்ததாகவும், அதனை சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத்தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து ஓட்டலுக்கு சென்ற போலீசார் செல்போன் குறித்து விசாரித்த போது மாணவர்கள் கஞ்சா போதையில் செய்த அட்டகாசம் வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவத்தன்று அழக்கப்பா கல்லூரியில் பிகாம் படிக்கும் அசோக் கோபிநாத் என்ற மாணவர் தான் புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்திற்காக தனது நண்பர்களுக்கு போதை விருந்து அளித்து உணவகத்தில் சாப்பிட அழைத்து வந்துள்ளார் .

அப்போது அந்த உணவகத்திற்கு தனது கணவருடன் உணவு பார்சல் வாங்க வந்த இளம்பெண் வெளியே நிற்க , கோபி நாத்தின் நண்பர்களில் ஒருவனான முகமது சல்மான் என்பவன் போதையில் தள்ளாடியபடியே ஓட்டலுக்குள் நுழையும்போது, வெளியில் நின்றஅந்த இளம்பெண்ணின் தலையில் உள்ள பூவை தனது கைகளால் இழுத்து விட்டு ஓட்டலுக்குள் சென்றுள்ளான். இதனால் பதறிப்போன அந்த பெண் பார்சலுக்காக காத்திருந்த தனது கணவரின் மேஜை அருகே சென்று அமர்ந்துள்ளார்.

அதன் பின்னரும் விடாத முகமது சல்மான், அந்தப் பெண்ணிடம் ஆபாச சைகை காண்பித்து அழைத்து உள்ளான். அதனைத் தொடர்ந்து அவரது கணவர் தனக்கு தெரிந்தவர்களை தொலைபேசியில் அழைக்க இதனை கவனித்த முகமது சல்மான் அந்த இளம்பெண்ணின் கணவரை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்க முயல அவனை, பெண்ணின் கணவர் மடக்கி பிடித்துள்ளார்.

இருவருக்குமிடையே என்ன பிரச்சனை என்று தெரியாமல் கஞ்சா போதையில் இருந்த அவரது நண்பர்கள் , பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கி உணவகத்தில் இருக்கிற பொருட்களை அனைத்தையும் தூக்கி வீசி உள்ளனர்.

அந்த இளம்பெண் சாலையில் வந்து கதறியும் அந்த சமயத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை. உணவகத்தில் இருந்த பணியாளர்கள் இந்த மாணவர்களை கட்டுப்படுத்த முயன்றாலும், போதையில் இருந்ததால் அங்கு இருப்பவர்கள் அனைவரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி இருப்பதை போலீசாரிடம் ஓட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த தம்பதியினர், புகார் எதுவும் கொடுக்காமல் வீட்டுக்கு சென்று விட சண்டையின்போது 2 செல்போன்கள் ஓட்டலிலேயே தவறி விழுந்துள்ளது. கடைக்காரர்களும் பாதிக்கப்பட்ட தம்பதியினரே புகார் கொடுக்கவில்லை நமக்கேன் வம்பு என்று அவர்களும் புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் மூலம் மாணவர்களின் போதை அட்டகாசம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் ஓட்டல் உரிமையாளரிடம் புகாரை பெற்ற போலீசார், போதை மாணவர்கள் முகமது சல்மான், அசோக் கோபிநாத், விசோக், ஹரிஹரன் , அஸ்வின் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் 7 மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

படிப்பை மறந்து போதையின் பாதைக்கு தடம் மாறினால் மாணவர்களுக்கு என்ன மாதிரியான சம்பவம் நிகழும் என்பதற்கு கம்பி எண்ணும் இந்த மாணவ தம்பிகளே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments