"கட்டைப்பையில்" கடத்தப்பட்ட குழந்தை.. 30 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..!

0 4576

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்து கட்டைப்பையில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 3ஆவது கணவரின் சொத்துகளை அபகரிப்பதற்காக கர்ப்பம் தரித்ததாக நாடகமாடி குழந்தையைக் கடத்திய பெண், தனியார் டயாப்பர் நிறுவனம் அளித்த சலுகைக்கு ஆசைப்பட்டு போலீசிடம் சிக்கியுள்ளார். 

தஞ்சாவூர் பர்மா காலணியைச் சேர்ந்த குணசீலன் - இராஜலட்சுமி தம்பதிக்கு, அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி பிறந்த பெண் குழந்தையை வெள்ளிக்கிழமை காலை மர்மப் பெண் ஒருவர், கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்றது சிசிடிவி மூலம் தெரியவந்தது. 

குழந்தையை கடத்திச் செல்லும்போது மருத்துவமனை அருகிலுள்ள மருந்துக்கடை ஒன்றுக்குச் சென்ற அந்தப் பெண், அங்கு குழந்தைக்கான டயாப்பரை வாங்கியுள்ளார். புதிதாகக் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்ற தனியார் டயாப்பர் நிறுவனத்தின் அறிவிப்பில் மயங்கி, தனது செல்போன் நம்பரை அந்தப் பெண் கொடுத்துள்ளார். அந்த செல்போன் எண் மூலமாகத்தான், பட்டுக்கோட்டையில் குழந்தையுடன் பதுங்கி இருந்த விஜி என்ற  பெண்ணை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பிடிபட்ட விஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து, குழந்தை இல்லாத காரணத்தால் இருவரையும் விவாகரத்து செய்த விஜி, 3ஆவதாக ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். குழந்தை பிறந்தால் மட்டுமே பல லட்சம் ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான 3ஆவது கணவனின் சொத்துகள் தனக்கு கிடைக்கும் என்பதால், எஜமான் பட மீனா போல, தலையணையை வயிற்றில் வைத்து கருவுற்று இருப்பதாக நடித்து குடும்பத்தினரை ஏமாற்றி வந்துள்ளார் விஜி. ஒரு கட்டத்தில் பிரசவத்திற்கு செல்வதாகக் கூறிவிட்டு தஞ்சை சென்ற விஜி, ஆதரவற்ற நிலையில் இருந்த இராஜலட்சுமியின் குழந்தையை நிதானமாக, திட்டமிட்டு, கடத்திச்சென்றுள்ளார் என்கின்றனர் போலீசார். 

கடத்தப்பட்ட 30 மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்த போலீசாருக்கு மருத்துவமனையில் கூடியிருந்த மக்கள் கைதட்டி, ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். 

பறிபோன குழந்தை மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீருடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார் இராஜலட்சுமி... 

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் அரசு மருத்துவமனைகளில் திடீரென தங்களுடன் நெருங்கிப் பழகும் புதிய நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தும் போலீசார், அவர்கள் மீது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசாரிடம் அவர்களைப் பற்றி தகவல் அளிப்பது நல்லது என்றும் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments