இயேசு உயிர்கொடுப்பார்.. தாயின் சடலத்தை வைத்து ஜெபம்.. திருச்சியில் ஒரு திகில் சம்பவம்..!

0 6335

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாய்க்கு மீண்டும் உயிர்வந்துவிடும் என மகள்கள் இருவரும் பைபிளை வைத்து 7 நாட்களாக ஜெபம் செய்து கொண்டிருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மகள்களிடம் இருந்து தாயின் சடலத்தை மீட்க நடைபெற்ற பேச்சுவார்த்தை தகராறில் முடிந்த நிலையில், சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால் உயிரை காப்பாற்றிவிடலாம் என சமயோஜிதமாக செயல்பட்ட போலீசார் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

மணப்பாறை அருகேயுள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி. இவருக்கு பி.எட் படித்த 43 வயதில் ஜெசிந்தா என்ற மகளும், 40 வயதில் ஜெயந்தி என்ற மகளும் இருக்கும் நிலையில், இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் இவர்களில் மேரி உடல் நலம் குன்றி இருந்த நிலையில், அவரை பார்ப்பதற்காக உறவினர் ஒருவர் சொக்கம்பட்டிக்கு வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, மேரி இறந்துவிட்டதும், உடலை அடக்கம் செய்யாமல் மகள்கள் இருவரும் மீண்டும் உயிர்வந்துவிடும் எனக் கூறி பைபிளை சடலத்தின் மீது வைத்து ஜெபம் செய்து கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, அவர் ஜெயந்தி, ஜெசிந்தாவிடம் பேசி உடலை அடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். அதற்கு, மகள்கள் இருவரும் அந்த உறவினரை திட்டி வெளியே அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் ஊர்மக்களிடம் தகவல் தெரிவிக்கவே, கிராம மக்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு மணப்பாறை உதவி ஆய்வாளர் சூர்யா தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். நீண்ட நேரமாக போலீசார் கதவை தட்டியும் திறக்காத நிலையில், பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்திருக்கின்றனர். உள்ளே சென்று பார்த்த போது, மேரியின் உடல் பாதி அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடலை மீட்க முயன்றனர்.

அப்போது, மேரியின் மகள்கள் இருவரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தாய் இன்னும் உயிரோடு தான் இருப்பதாகவும், அனுமதியின்றி வந்து வீட்டில் ஆய்வு செய்வதாக கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்வதறியாமல் திகைத்த போலீசார், தாய் மேரியை சிகிச்சைக்கு கொண்டு செல்வதாகவும், மருத்துவமனைக்கு சென்று உயிரை காப்பாற்றிவிடலாம் எனவும் பொய் சொல்லி சமாதானப்படுத்த முயன்றனர்.

ஆனாலும், மகள்கள் இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாருக்கு தலைவலியை கொடுத்த நிலையில், பின்னர் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. மேரியை பரிசோதித்த ஆம்புலன்ஸ் செவிலியர், போலீசார் கூறியபடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் உயிரை காப்பாற்றிவிடலாம் எனக் கூறவே, ஒருவழியாக போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மேரி இறந்து 7 நாட்கள் ஆகியிருக்கக் கூடும் எனவும், உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும் கூறினார். மருத்துவர் கூறியதை ஏற்க மறுத்த மகள்கள் இருவரும் தாய் உயிருடன் வந்துவிடுவார் எனக் கூறி அங்கும் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர், மேரி எவ்வாறு இறந்தார் என்பதை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு துவங்கி சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின்னரே மகள்களிடம் இருந்து தாயாரின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக, செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களுடனும் மகள்கள் இருவரும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.

மூடநம்பிக்கை முற்றி, தாயின் சடலத்தை வீட்டுக்குள் வைத்து 7 நாட்களாக ஜெபம் செய்து வந்த மகள்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments