உள்ளாட்சித் தேர்தல் - 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு..!

0 2769
உள்ளாட்சித் தேர்தல் - 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு..!

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. சில இடங்களில் குளறுபடிகள், பிரச்சனைகள் காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 கிராம ஊராட்சி தலைவர், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. கடைசி ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதன் அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர, பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள ஊராட்சி பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில், சுயேட்சை வேட்பாளர்கள் சார்பில் அமர வைக்கப்படும் ஏஜெண்டுகளுக்கு படிவம் வழங்கக் கூடாது எனக் கூறி அரசியல் கட்சியைச் சேர்ந்த முகவர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது மோதலாக மாறியது.

மீண்டும் ஆக்ரோஷமாக இருதரப்பும் மோதிக் கொண்டதால் சண்டையிட்டவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியேற்றபட்டனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட 137ஆவது வாக்குச்சாவடியில், தேர்தல் பணியாளர் ஸ்டெல்லா மேரி என்பவர் ஒரு சின்னத்தை குறிப்பிட்டு வாக்குச் செலுத்தச் சொல்லியாக எழுந்த புகாரை அடுத்து வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூந்தண்டலம் ஊராட்சியில் 12ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவின்போது, ஒன்றியத்தின் பெயர் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்ததால், அதற்கான வாக்குப்பதிவு மட்டும் நிறுத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments