ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு... அனாதையான 3 குழந்தைகள்... கண்ணீரில் தவிக்கும் சோகம்..!

0 3430

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாமனாருக்கு பெற்றுக் கொடுத்த கடனுக்காக நிலத்தையும் வீட்டையும் பறிகொடுத்தவர், ஆத்திரத்தில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதால், அவர்களது 3 குழந்தைகள் நிர்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயியான இவரது மனைவி கலைசெல்வி . இந்த தம்பதிக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். மூர்த்திக்கு பூர்வீக சொத்தாக ஆகாரம் கிராமத்தில் 2 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் வீடு இருந்துள்ளது.

தனது மனைவியின் தந்தை ஏழுமலைக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை மீட்க கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்தியின் சொத்தை ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த நபரிடம் அடமானம் வைத்து ஏழுமலை பணம் பெற்றதாக கூறப்படுகின்றது.

அடமானம் வைத்ததோடு சரி, மாமனார் 6 ஆண்டுகளாக வட்டி செலுத்தாத நிலையில் கடன் கொடுத்தவர் ஜாமீன் ஏற்ற மூர்த்தியை கடுமையாக மிரட்டியுள்ளார். தனது சொத்தை அடமானம் வைத்ததோடு மாமனார் அதனை மீட்கவும் முயற்சி மேற்கொள்ளாததால், மூர்த்திக்கும், அவரது மனைவி கலைசெல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் வீட்டை வேறு நபர்களிடம் விற்றுவிட அவர்கள் வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து வெள்ளிக்கிழமை மதியம் மூர்த்திக்கும் அவருடைய மனைவி கலைசெல்விக்கும் மீண்டும் சொத்தை மீட்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி அருகில் இருந்த சுத்தியை எடுத்து மனைவியின் பின்பக்க தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கலைசெல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தனது ஆத்திரத்தால் மனைவி கொல்லப்பட்டுவிட்டதை உணர்ந்து அதிர்ந்து போன மூர்த்தி, அருகில் இருந்த விவசாய நிலத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தையின் ஆத்திரத்தால் தாய் பலியாகி அவரும் உயிரை மாய்த்துக் கொண்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களது 3 குழந்தைகளையும் கதறி அழுதனர்

பின்னர் தகவலறிந்து வந்த ஆரணி கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 சடலங்களையும் மீட்டு பிணக்கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்களை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து அவர்களது மகள் ஓடிச்சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது

தாயையும் தந்தையும் இழந்து கண்ணீருடன் நிர்கதியாக நிற்கும் 3 குழந்தைகளின் நலன் கருதியாவதுஅவர்களது நிலம் மற்றும் வீட்டை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்

பெற்றோர் கடன் வாங்கும் முன்பாக, திருப்பி செலுத்துவதற்கு தங்களிடம் உள்ள நிதி ஆதாரங்களை உணரவேண்டியது அவசியம். அதே போல உடன் பிறந்தவராக இருந்தாலும் அடுத்தவருக்காக கடன் விவகாரங்களில் ஜாமீன் ஏற்றால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments